புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் ரெய்டு
1/9/2025 3:26:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் ஊழியர் நியமனம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று மீண்டும் ரெய்டு நடத்தினர். புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்குள்ள நிர்வாக பிரிவில் ஊழியர்களை நியமித்ததிலும், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வாங்கியதிலும், தினக்கூலி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதிலும் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜிப்மர் ஊழியர்கள் சங்கம் சார்பில் சிபிஐக்கும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கும் புகார்கள் அனுப்பப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ. அதிகாரிகள் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள நிர்வாக பிரிவில் ஆய்வு நடத்தினர். அப்போது, அங்கிருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், நிர்வாக பிரிவு அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழுவினர் ஜிப்மர் நிர்வாக பிரிவு கட்டிடத்தில் மீண்டும் ஆய்வு செய்தனர். அங்கிருந்த அறைகளை பூட்டிவிட்டு ஜிப்மர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். நேற்று மதியம் தொடங்கிய சிபிஐ ரெய்டு இரவு வரை நீடித்தது. அப்போது, ஊழியர்கள் நியமன முறைகேடு, மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்ததாக தெரிகிறது. மேலும், டெல்லிக்கு சென்றுள்ள ஜிப்மர் இயக்குநரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிர்வாகப் பிரிவிலிருந்து சில முக்கிய ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.