திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம்: பொது மக்கள் தவிப்பு
1/9/2025 3:21:09 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பொருட்கள், பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் நுகர்வோர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 5,62,583 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி கரும்பு துண்டுடன் தலா ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் வேட்டி-சேலை வழங்கப்பட உள்ளது. இதற்காக 11,252 கிலோ முந்திரி, 11,252 கிலோ உலர் திராட்சை, 2,813 கிலோ ஏலக்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலூர் மாவட்டத்தில் இருந்து 2,50,037 கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு இன்று காலை 10 மணிக்கு பிறகே வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டது. இவை, கடைகளுக்கு சென்று சேர பகல் 12 மணி ஆகிவிட்டது. அதோடு, பொங்கல் பரிசுடன் வழங்க வேண்டிய ரொக்கப்பணம், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் காலை 10 மணிக்கு வங்கியில் இருந்து எடுக்கப்பட்டு, அந்தந்த செயலாளர்கள் மூலம் ரேஷன் கடைகளுக்கு சென்று வழங்கவும் பகல் 12 மணிக்கு மேலானது.
இதனால், பொங்கல் பரிசு வழங்கும் பணி தாமதமாக தொடங்கியது. தினமும் காலை 8.30 மணி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்த நிலையில், அனைத்து ரேஷன் கடைகள் முன்பு காலை 8 மணிக்கே மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பொங்கல் பரிசு பெற பல மணி நேரம் காத்திருந்தனர். மேலும் ஒரே நாளில் பொதுமக்கள் ரேஷன் கடை முன் குவிவார்கள் என்பதாலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், ஒரு ரேஷன் கடைக்கு ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரேஷன் கடைகளில் தகராறு நடந்தால், நிலைமையை உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று நிலைமையை சமாளிக்க ஒவ்வொரு போலீஸ் சப்-டிவிஷனிலும், அதிரடி படை போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.