100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிரை புகையான் நோய் தாக்கியது: கடன் வாங்கிய விவசாயிகள் கண்ணீர்
1/9/2025 3:04:32 PM
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை புகையான் நோய் தாக்கியது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் 100க்கு மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்துள்ளனர். ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவ மழை பொய்த்துப்போனதால் நெல் பயிர்களுக்கு பாய்ச்ச போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் சில விவசாயிகள், பக்கத்து நிலத்துக்காரர்களிடம் இருந்து பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் நெய்பயிர்களை புகையான் நோய் தாக்கியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த முடியாததால் நெற்பயிர்களில் பால் பிடித்து நெற்கதிர் முற்றிய நிலையில் கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது; ஒரு ஏக்கருக்கு ₹25 ஆயிரம் செலவு செய்து நெற்பயிர் சாகுபடி செய்துள்ளோம். அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், பயிர்களில் புகையான் நோய் தாக்கியுள்ளது. ஒரு ஏக்கருக்கு 30மூட்டை விளையவேண்டிய நிலத்தில் 3 மூட்டை நெல்லாவது கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்காத நிலைமையில் உள்ளோம். ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் பகுதிகளில் விதை நெல் விற்பனை மையத்திலும் ஒரு சிலர் வேளாண்மை துறை அலுவலகத்திலும் விதை நெல் வாங்கி பயிர் செய்து வேளாண்மைதுறை அதிகாரிகளின் அறிவுறுத்தல்படிதான் பயிர் செய்கிறோம். ஆனால் புகையான் நோய் தாக்கி பயிர்கள் அனைத்தும் பதர்களாக மாறிவிட்டது. கூட்டுறவு சங்கத்தில் மட்டுமல்லாமல் தனி நபரிடமும் கடன் வாங்கி பயிர் செய்துள்ளோம். புகையான் நோய் தாக்கியுள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. புகையான் தாக்கி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.