ரேஷன் கடைகளில் போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்
1/9/2025 2:58:18 PM
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது. 2020ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்க பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று காலை 8.30 மணிக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்க காலை 7.30 மணி முதலே ரேஷன் கடைகளில் பொதுமக்கள் திரண்டனர். இதனால், கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கூட்டம் அதிகமாக காணப்பட்ட இடங்களில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால், வரிசையில் வந்து பொங்கல் தொகுப்பினை வாங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்று தொடங்கியுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியானது வரும் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. ரேஷன் கடைகளில் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் குறைந்தபட்சம் தினசரி 250 முதல் 300 பேருக்கு தெரு வாரியாக பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.