மெட்ரோ ரயில் நிலையங்களில் பொங்கல் கலைவிழா: இன்று முதல் 3 நாள் நடக்கிறது
1/9/2025 2:45:37 PM
சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று முதல் 3 நாட்கள் பொங்கல் கலைவிழா நடைபெறுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் கலைவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று முதல் 3 நாள் நடைபெறுகிறது. தஞ்சையில் உள்ள தென்னகப்பண்பாட்டு மையத்துடன் இணைந்து தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு கலைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளோடு கொண்டாடப்படவுள்ள இவ்விழா சைதாப்பேட்டை, சென்ட்ரல் மற்றும் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையங்களில் நடைபெறுகிறது.
அதன்படி, இன்று சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலும், நாளை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும், நாளை மறுநாள் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மாலை 5.45 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில், ஒப்பனா நடனம், டோலுகுனிதா துள்ளிசை நடனம், தப்பாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மூன்று நாள் பொங்கல் கலைவிழா நிகழ்வுகளையும் பொதுமக்கள் கண்டு மகிழ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். எனவே, மெட்ரோ ரயில் பயணியர், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்பொங்கல் கலைவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.