வேலைவாங்கி தருவதாக ரூ.35 லட்சம் மோசடி செய்து 6 பெண்களை மணந்த பார்வையற்றவர்: பணத்தை வாரியிறைத்து உல்லாசம்
1/8/2025 4:45:06 PM
சேலம்: வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த மாற்றுத் திறனாளி, 6 பெண்களை திருமணம் செய்ததுடன் பணத்தை வாரியிறைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்தது அம்பலமாகியுள்ளது.தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் டேவிட்(40). இவர் பார்வை குறைபாடு கொண்டவர். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அம்மாப்பேட்டை சேர்ந்த ஆசிப்அலி, நாகராஜன் உள்பட 7 பேரிடம் ₹35 லட்சம் மோசடி செய்ததாக டேவிட் மீது சூரமங்கலம் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், போலீசார் விசாரித்து டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், மோசடி செய்த பணத்தை பெண்களுக்கு கொடுத்து டேவிட் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி டேவிட் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: கண்பார்வை குறைபாடு கொண்ட நான் ரயிலில் பயணம் செய்யும்போது இருக்கை அருகில் பெண்கள் வந்து அமர்வார்கள். அவர்களிடம் பேச்சுக்கொடுத்து, செல்போன் நம்பரை வாங்குவேன். பின்னர் அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வேன். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்பு மொரப்பூரை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். பார்வை குறைபாடு ெகாண்ட என்னிடம் வருவதற்கு பெண்கள் தயக்கம் காட்டுவார்கள். அவர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்து என்வசம் இழுப்பேன்.
சென்னை நீதிமன்றம் ஒன்றில் பணியாற்றி வந்த துப்புரவு வேலை செய்து வந்த பெண்ணிடம் குடும்பம் நடத்தினேன். சேலம், நாகர்கோவில், மதுரை பகுதிகளை சேர்ந்த 5 பெண்களை திருமணம் செய்துள்ளேன். தற்போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மொரப்பூரை சேர்ந்த 6வது மனைவி கலைச்செல்வியுடன் வசித்து வருகிறேன். இன்னும் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. தேவைப்படும் போது பணத்தை கொடுத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். கடந்த 2 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்துவந்த என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு கூறியுள்ளார்.