நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நகல் எடுக்க ரூ.500 லஞ்சம் அலுவலருக்கு ஓராண்டு சிறை
1/8/2025 4:01:29 PM
நெல்லை: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள வன்னிக்கோனேந்தல் தெற்குத் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி சுந்தரதாய்க்கு தென்காசி பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பான ஆவணத்தின் நகல் வேண்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி நகல் எடுக்கும் பிரிவுக்கு வந்து அங்கு பணியில் இருந்த பாளை தியாகராஜநகரை சேர்ந்த முகமது பசுலுதீன் என்பவரிடம் நிலம் தொடர்பான நகல் கேட்டுள்ளார். ஆனால், அவ்வாறு நகல் எடுக்க ரூ. 500 லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதுபற்றி சுந்தரதாய், நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் கொடுத்த ஆலோசனைபடி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சுந்தரதாயிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முகமது பசுலுதீனை கைது செய்தனர்.இவ்வழக்கு நெல்லை மாவட்ட ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பத்மா விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட முகம்மது பசுலுதீனுக்கு ஓராண்டு சிறையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.