வங்கியில் ரூ.25 கோடி கடன் வாங்கி தருவதாக கட்டுமான நிறுவனத்திடம் ரூ.1.21 கோடி மோசடி செய்த 2 பேர் கைது
1/7/2025 3:13:39 PM
சென்னை: பெங்களூரு கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.25 கோடி வங்கியில் கடன் வாங்கி தருவதாக ரூ.1.21 கோடி பணம் பெற்று மோசடி செய்த இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் என்பவர் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சரவணன் மற்றும் கிஷோர் ஆகியோர் தங்களுக்கு தெரிந்த வங்கி அதிகாரிகள் மூலம் ரூ.25 கோடி பணம் கடன் வாங்கி தருவதாக தெரிவித்தனர். அதற்காக ரூ.1.21 கோடி கமிஷனாக அவர்கள் கடன் வாங்கி கொடுக்கும் முன்பே பணத்தை பெற்று கொண்டனர். ஆனால் சொன்னபடி இருவரும் எங்கள் கட்டுமான நிறுவனத்திற்கு வங்கியில் கடன் வாங்கி தரவில்லை.
பின்னர் நான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.1.21 கோடி பணத்ைத மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பெங்களூரு கட்டுமான நிறுவனத்திற்கு கடன் வாங்கி கொடுப்பதாக ரூ.1.21 கோடி பணம் பெற்று திருமங்கலத்தை சேர்ந்த சரவணன் மற்றும் கிஷோர் ஆகியோர் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. அதைதொடர்ந்து போலீசார் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.