ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ அமைப்பு பொறுப்பேற்பு
1/7/2025 3:06:13 PM
புதுடெல்லி: டெல்லி ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ என்ற தீவிர வலதுசாரி குழு பொறுப்பேற்பதாக, அதன் நிர்வாகி பிங்கி சவுத்ரி பேட்டி அளித்துள்ளார். இதற்கிடையே ‘சர்வர்’ அறையை அடித்து நொறுக்கியதாக கூறி மாணவர் சங்க தலைவர் உட்பட 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி புகுந்து மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்திய முகமூடி கும்பலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஜேஎன்யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதலுக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ என்ற தீவிர வலதுசாரி குழு பொறுப்பேற்றுள்ளது.
இதுதொடர்பாக, ‘இந்து ரக்ஷா தளம்’ குழுத் தலைவர் பூபேந்திர தோமர் என்கிற பிங்கி சவுத்ரி என்பவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேசவிரோத மற்றும் இந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் சிலர் ஈடுபட்டு வருவதால், எங்களது அமைப்பை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலை நடத்தினர். ஜேஎன்யூ என்பது தேசிய விரோத நடவடிக்கைகளின் மையம். இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள முடியாது. ஜேஎன்யு-வில் நடந்த தாக்குதலின் முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அவர்கள் எங்கள் அமைப்பினர் என்று கூற விரும்புகிறோம். எதிர்காலத்தில், யாராவது தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றால், பிற பல்கலைக்கழகங்களிலும் இதே நடவடிக்கையை எடுப்போம். அவர்கள் நம் நாட்டில் வாழ்கிறார்கள்; அவர்கள் இங்கே சாப்பிடுகிறார்கள்; கல்வியைப் பெறுகிறார்கள்; பின்னர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஜேஎன்யூ தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எங்கள் அமைப்பினர். நாட்டிற்காக எங்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார், இரண்டு எஃப்.ஐ.ஆர்களை பதிவு செய்துள்ளனர். அவற்றில் ஒன்று ஜன. 5ம் தேதி வன்முறைக்கு முன்னதாக, பல்கலைக்கழகத்தின் ‘சர்வர்’ அறையை அடித்து நொறுக்கியதற்காக ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆயி கோஷ் மற்றும் 19 பேர் மீது வழக்குபதியப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக மற்றொரு வழக்கும் பதியப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினர் இந்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இருப்பினும், வன்முறை தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் இன்னும் எவரையும் கைது செய்யவில்லை. தற்போது தாக்குதல் சம்பவத்துக்கு ‘இந்து ரக்ஷா தளம்’ பொறுப்பேற்றுள்ளதால், அதன் நிர்வாகி பிங்கி சவுத்ரி அளித்த பேட்டியின் அடிப்படையில் போலீசார் அந்த அமைப்பினரை அடையாளம் கண்டு விசாரித்து வருகின்றனர். மேலும், ஜேஎன்யூ-வில் முகமூடி அணிந்து கொண்டு வந்தவர்கள் குறித்த வீடியோ காட்சிகள் மற்றும் முகம் அடையாளம் காணும் அமைப்புகளின் உதவியை டெல்லி போலீசார் நாடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.