ஐசிஎப் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 2 ரவுடிகள் சுற்றி வளைத்து கைது
1/7/2025 3:02:46 PM
அண்ணா நகர்: ஐசிஎப் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி செயின், செல்போன் பறிப்பு, வீடுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, 5 பவுன் நகை, 3 இரு சக்கர வாகனம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ஐசிஎப், வில்லிவாக்கம் போன்ற சுற்றுவட்டார பகுதியில் பூட்டி கிடைக்கும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப்பது, நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செயின், செல்போன் பறிப்பது, தள்ளுவண்டி கடைக்காரர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமுல் வசூலிப்பது போன்ற பல புகார்கள் ஐசிஎப் காவல் நிலையத்துக்கு வந்தது.
இந்நிலையில் உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி, எஸ்ஐ யுவராஜ் தலைமையில் தனிப்படை போலீசார், இவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது ஐசிஎப் பகுதியிலுள்ள ஆடுதொட்டியில் 2 ரவுடிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. உடனே தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த 2 ரவுடிகள், போலீசாரை தள்ளிவிட்டு தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் ஐசிஎப் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள், ஐசிஎப் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த ரவுடிகள் நெப்போலியன் (25), முருகன் (25) எனவும் வில்லிவாக்கம், ஐசிஎப் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின், நகை, செல்போன் பறிப்பது, பூட்டி கிடைக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, பெட்டி கடை, தள்ளுவண்டி, டிபன் கடை உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. மேலும், வில்லிவாக்கம், ஐசிஎப் அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு, அடிதடி, இரு சக்கர வாகனம் திருடிய வழக்கு போன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இவர்களிடம் இருந்து 5 பவுன் நகை, செல்போன், 3 இரு சக்கர வாகனம், 2 பெரிய பட்டா கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.