மகன், மகளுடன் பிரதமருடன் சந்திப்பு பாஜவில் சேருகிறார் நடிகர் மோகன்பாபு
1/7/2025 2:43:31 PM
திருமலை: மகன், மகளுடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்த தெலுங்கு நடிகர் மோகன்பாபு பாஜவில் சேர திட்டமிட்டுள்ளார். நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பர் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு. இவர் ஆந்திர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். முதலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபுவுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அம்மாநிலத்தில் கடந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அப்போது மோகன்பாபு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் ஜெகன்மோகன் முன்னிலையில் திடீரென இணைந்து கொண்டார். மேலும் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் சார்பில் சந்திரகிரி தொகுதியில் போட்டியிட்ட பாஸ்கருக்கு ஆதரவாக பிரசாரமும் செய்தார்.
இந்நிலையில் நடிகர் மோகன்பாபு, நடிகரான தனது மகன் விஷ்ணு, நடிகையான மகள் லட்சுமி ஆகியோருடன் நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். சுமார் 30 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் மோடி, பாஜவில் சேர வேண்டும் என்று மோகன்பாபுவிற்கு அழைப்பு விடுத்ததாகவும் இதனை மோகன்பாபு ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.