கேரளாவில் பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்ட முன்னுரை வாசிக்க நடவடிக்கை
1/7/2025 2:41:58 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி, கல்லூரிகளில் காலை அசம்பிளி நேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டி தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. கேரளாவிலும் கடும் எதிர்ப்பு உள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அம்மாநில சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கோழிக்கோட்டில் கல்லூரி மாணவர் சங்க தலைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்து பேசியதாவது: நமது நாட்டில் தற்போது மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது. அரசியல் காரணங்களுக்காக பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படுகிறது. இதனால் இளைஞர்களின் மனநிலை கடுமையாக பாதிக்கப்படுகிறது.
பெரும்பாலான மாணவர்களுக்கு நமது இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை. எனவே கேரளா முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் காலை பிரார்த்தனை நேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர் சங்கத்தில் மாணவிகளுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.