குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தந்தை கைது இந்த கடிதத்தை எழுதும்போது என் கைகள் நடுங்குகின்றன: உ.பி முதல்வருக்கு 15 வயது சிறுவனின் கண்ணீர் கடிதம்
1/5/2025 2:16:42 PM
லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட தந்தையின் பிரிவால் வருந்தும் 15 வயது சிறுவன், உத்தரபிரதேச முதல்வருக்கு எழுதிய கண்ணீர் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிச. 19ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வன்முறையாக மாறிய சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்ட செயற்பாட்டாளர் தீபக் கபீரின் 15 வயது மகன் சூஃபி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்புள்ள திரு.யோகி, உங்களுக்கு 2020ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக இருக்கும் என்றே நம்புகிறேன். குரல்களை அடக்குவது, குழந்தைகள் கொலை செய்யப்பட்டது போன்றவை குறித்து எவ்வாறு நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று உறுதியாக தெரியவில்லை. சரி, என் தந்தை கடந்த 15 நாட்களாக சிறையில் இருக்கிறார். எனது சொந்த நகரத்தைச் சுற்றிய கொடூரங்களை நான் கண்டிருக்கிறேன். அதனை எதிர்ப்பது, அரசாங்கத்தை விமர்சிப்பது, அநியாய சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்புவது நமது அரசியலமைப்பு உரிமை என்று கற்பிக்கப்பட்டுள்ளேன்.
நான் சிறு வயதிலிருந்தே எதிர்ப்புக்களுடன் செல்லத் தொடங்கிய சூழலில் வளர்ந்திருக்கிறேன். அநீதிக்கு எதிராக எப்போதும் எழுந்து நிற்க வேண்டும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். வன்முறையில் ஈடுபட்டவர்களை உங்கள் காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என்று சொல்லுங்கள். அவ்வாறு செய்திருந்தால் நான் உங்களை ஆதரித்திருப்பேன். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை ஏன் கைது செய்தீர்கள் என்று சொல்லுங்கள்?. எனக்கு 15 வயது, இந்த 15 ஆண்டுகளில் நிறைய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் கலந்து கொண்டேன். தற்போது ஏற்பட்டுள்ள பயத்தை போன்று, நான் ஒருபோதும் அனுபவித்ததில்லை. உங்கள் வகுப்புவாத பிரசாரத்தின் காரணமாக எனது நண்பர்கள் திகிலடைந்துள்ளனர். ஆர்வலர்கள் மற்றும் அப்பாவிகள் பூட்டப்பட்டுள்ளனர். கலகக்காரர்களும் குற்றவாளிகளும் தாராளமாக சுற்றித் திரிகிறார்கள். நான் எனது தந்தையை கடைசியாகப் பார்த்தது எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒரு நாள் கழித்துதான். ஆமாம், கைது செய்யப்பட்ட நபர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக காவல் நிலையம் சென்றபோது பார்த்தேன்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நகரத்தைச் சுற்றி நல்லிணக்கத்தையும் கலாசாரத்தையும் வளர்த்த ஒருவர் கலகக்காரர் என்ற பெயரில் கைது செய்யப்பட்டார். என் தந்தை எல்லோராலும் பாராட்டக் கூடியவர். நீங்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கைது செய்துள்ளீர்கள். இன்னும் உங்களை நீங்கள் ஜனநாயகவாதி என்று அழைக்கிறீர்கள். நீங்கள் குழந்தைகளுக்குள் பயத்தை வைத்திருக்கிறீர்கள்.நான் இந்த கடிதத்தை எழுதும்போது என் கைகள் நடுங்குகின்றன. நீங்கள் செய்த ஒவ்வொரு ஜனநாயக விரோத செயலுக்கும் வாழ்த்துக்கள். என் தந்தை விடுவிக்கப்பட்ட நாளில், நீங்கள் அவருடன் பேச வேண்டும். அவருடைய சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் ஊக்குவிப்பது அமைதிதான். முடிவாக, எனது தந்தையையும் அனைத்து அப்பாவிகளையும் விரைவில் விடுவிப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சூஃபியின் தந்தை கபீருக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுக்கப்பட்டது. மேலும் அவரது மனு நாளை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் சூஃபி-யும் அவரது குடும்பத்தாரும் உள்ளனர்.