குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்
1/4/2025 2:27:30 PM
திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்ட பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மேற்கு வங்கம், டெல்லி உட்பட 11 மாநில முதல்வர்களுக்கு ேகரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பியுள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவில் ஆளும் கட்சியும் எதிர்கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை வாபஸ் பெற கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், டெல்லி, மகராஷ்டிரா, பீகார், ஆந்திரா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய பா.ஜ. ஆளாத 11 மாநில முதல்வர்களுக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது நாட்டின் அடிப்படை தத்துவம்.
ஆனால் சில சக்திகள் ஒற்றுமையாக வாழும் மக்களிடம் பிரிவினைவாதம் என்ற விஷத்தை விதைக்கிறார்கள். இதை அனுமதிக்கக்கூடாது. ஜனநாயகத்தையும் மதசார்பின்மையையும், பாதுகாக்க வேண்டியது இந்த காலகட்டத்தின் கட்டாயமாகும். எல்லா கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு சமூக நன்மைக்காக ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் தயாராக வேண்டும். தற்ேபாது ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்கொள்ள வேண்டும். தேசிய குடியுரிமை பதிவேட்டை குறித்துதான் தற்போது கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை தேசிய குடியுரிமை பதிவேட்டிற்காக பயன்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. எனவே தான் கேரளாவில் தேசிய மக்கள் ெதாகை கணக்கெடுப்பின் செயல்பாடுகளை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். இது போல குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாட்டிற்கு ஆபத்தை எற்படுத்தும் என்பதால் அந்த தீர்மானத்தை வாபஸ் பெற கோரி கேரள சட்டசபையில் கடந்த 31ம் தேதி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதுபோல அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அப்படி செய்தால் மத்திய அரசு தனது முடிவை மாற்ற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.