30 ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வேண்டும்: பல்கலை. விவாத நிகழ்ச்சியில் கோரிக்கை
1/4/2025 2:26:27 PM
சென்னை: தமிழகத்தில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 1.5 லட்சம் இலங்கை அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றால் தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விவாத நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக அரசியல், பொது நிர்வாகத்துறை சார்பில் நேற்று நடந்தது. இதில் அரசியல், பொது நிர்வாகத்துறைத் தலைவர் ராமு மணிவண்ணன், மாணவர்கள், இலங்கை அகதிகள், பங்கேற்றனர். விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அகதிகள் சிலர் பேசியதாவது:கடந்த 30 ஆண்டுகளாக அகதிகளாகவே வாழ்ந்து வருகிறோம். எப்படியும் இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.
ஆனால் அகதிகளாக உள்ள எங்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக சிஏஏவில் எதுவும் குறிப்பிடவில்லை. போரில் உயிரை காப்பாற்றிக்கொள்ள இங்கு தப்பி வந்ததால் இலங்கை குடிமகன் என்பதற்கு எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. அதே போல் இந்திய குடிமகன் என்பதற்கான அரசு ேகட்கும் ஆதாரங்களும் எங்களிடம் இல்லை. இங்கு வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம், இங்கு படித்ததற்கான சான்று, இங்கு பிறந்த குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ் தான் எங்களிடம் ஆவணங்களாக உள்ளது. இலங்கையிலிருந்து அகதியாக தமிழகம் வந்த 1.5 லட்சம் பேரில் 90 சதவீததத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமை பெறவே விரும்புகின்றனர். இலங்கை அகதிகள், சிலர் தமிழக பெண்களை திருமணம் செய்துள்ளனர். தமிழர்கள், இலங்கை அகதிகள் முகாமில் உள்ள பெண்களை திருமணம் செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டால் அந்த குடும்பங்களில் எந்த மாதிரியான பிரச்னைகள் எழும் என தெரியவில்ைல. நன்றாக படிக்கும் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு கூட, வெளிமாநிலங்களில் தங்கி படிக்க அனுமதிப்பதில்லை. அதனால் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது, இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர்கள் பேசினர்.