உலக கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியாவுக்கு முன்னேற்றம்: பிரதமர் மோடி தகவல்
1/3/2025 2:18:17 PM
பெங்களூரு: ‘உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 52 ஆக உயர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று பிரதமர் மோடி பெங்களூருவில் நடந்த நிகழ்வில் தெரிவித்தார். கர்நாடகாவில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (டிஆர்டிஓ) இளம் விஞ்ஞானிகள் ஆய்வகங்களை அறிமுகப்படுத்தியும், இந்திய அறிவியல் காங்கிரசின் 107வது அமர்வைத் திறந்துவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவின் இளம் விஞ்ஞானிகள், புதுமை, காப்புரிமை, உற்பத்தி மற்றும் செழிப்பு ஆகிய 4 படிநிலைகளை பின்பற்றினால், நாட்டை நாம் விரைவான வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும். இந்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளின் நிலப்பரப்பை மாற்ற வேண்டியதன் அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதன் வெற்றியைப் பொறுத்தே அமைகிறது. தாங்கள் புதுமை செய்தால் அது உற்பத்தியை மென்மையாக்கும். மேலும் இந்த தயாரிப்புகளை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும்போது, அவை செழிப்பை தரும் என்று நம்புகிறேன். உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை 52 ஆக உயர்ந்துள்ளது என்பதை அறிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் திட்டங்கள் முந்தைய 50 ஆண்டுகளைவிட கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக தொழில்நுட்ப வணிக இன்குபேட்டர்களை உருவாக்கியுள்ளன. இதற்காக விஞ்ஞானிகளை வாழ்த்துகிறேன். இவ்வாறு பேசினார்.