அதிமுக மாநில நிர்வாகிக்கு கத்திக்குத்து
1/2/2025 4:45:59 PM
கடலூர்: கடலூர் கேடிஆர் நகரில் மறைந்த பாஜக மாநில தலைவர் கிருபாநிதியின் மகனும் அதிமுக மாநில மருத்துவரணி தலைவருமான டாக்டர் சீனுவாசராஜா(55) வசித்து வருகிறார். நேற்று மதியம் 2.30 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தனது காரிலிருந்த பொருட்களை எடுத்து வருமாறு மாடியிலிருந்த மகன் டாக்டர் வசந்தை(26) அழைத்தார். தந்தையின் அழைப்பை கேட்டு மாடியிலிருந்து வசந்த் கீழே இறங்கிவந்தார். அப்போது பக்கத்தில் பூட்டப்பட்டிருந்த அவரது அத்தை வீட்டில் ஒரு மர்ம நபர் சுற்றிவருவதை கண்டார். சந்தேகமடைந்த அவர், மர்ம நபரிடம் யார் நீ? என்ன செய்கிறாய் எனக் கேட்கவே சுதாகரித்துக்கொண்ட மர்ம நபர், தான் ஒரு பிளம்பர் என்றும் வேலைக்காக அழைத்ததால் வந்ததாகவும் கூறினான்.அப்படி நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. நீ எதற்காக அத்துமீறி உள்ளே சென்றாய் என கேட்டுக்கொண்டிருக்கும் போது அந்த நபர் சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றான். அப்போது வெளியே வந்த டாக்டர் சீனுவாச ராஜா ஓடிச்சென்று அந்த நபரை பிடித்து, போலீசுக்கு தகவல் கூறி அழைக்குமாறு கூறினார்.
இதனால் பதற்றமடைந்த மர்ம நபர் டாக்டரின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சீனுவாசராஜாவின் இடது தோள்பட்டையில் குத்தி தப்பினான். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சீனுவாசராஜா வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.