வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்தில் 2 பேர் பரிதாப பலி: 2 ஆட்டோ டிரைவர் கைது
1/2/2025 4:40:01 PM
பூந்தமல்லி: சென்னீர்குப்பம் பகுதியில் வெவ்வேறு இடத்தில் நடந்த விபத்துக்களில் 2 பேர் உயிரிழந்தனர். இதுசம்பந்தமாக ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது மோடி (45). இவர் சென்னை அருகே சென்னீர்குப்பத்தில் உள்ள தனியார் லெதர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று சைக்கிளில் குமணன்சாவடி நோக்கி சென்றபோது அங்கு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ, அவரது சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்டு முகமது படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு முகமது மோடி பரிதாபமாக பலியானார்.
மற்றொரு சம்பவம் பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடி, எத்திராஜ் அவென்யூவை சேர்ந்தவர் ராஜகோபாலன் (70). இவர் நேற்று சென்னீர்குப்பம்-ஆவடி சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த ஆட்டோ மோதியது. இதில் ராஜகோபாலன் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக பலியானார். அவரது உடலை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்துக்கள் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர்கள் பூந்தமல்லி பூபதி (27) மற்றும் ஆவடி சம்சுதீன் (24) ஆகியோரை கைது செய்தனர்.