ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் திமுக தொடர்ந்து முன்னிலை: பல வாக்கு எண்ணிக்கை மையங்களில் குளறுபடியால் பரபரப்பு
1/2/2025 3:54:43 PM
சென்னை: தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது. மாவட்டக் கவுன்சிலர் பதவிகளில் திமுக அதிக இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பாலான இடங்களில் குளறுபடியால் ஓட்டு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது.தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த மாதம் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 3 லட்சத்து 2 ஆயிரத்து 994 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி 18 ஆயிரத்து 570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
முதல்கட்டமாக கடந்த 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2,546 ஒன்றிய குழு உறுப்பினர்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 76.19 சதவீத வாக்குகள் பதிவானது. அதேபோல் 2ம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 2,544 ஒன்றிய குழு உறுப்பினர், 38,916 ஊராட்சி வார்டு உறுப்பினர், 4,924 ஊராட்சி தலைவர் பதவி என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் 77.73 சதவீத வாக்குகள் பதிவானது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 91,975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதில் மொத்தம் 515 மாவட்டக் கவுன்சிலர், 5090 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. மீதம் உள்ள பதவிகள் பஞ்சாயத்து தேர்தலுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவின் போது வன்முறை நடந்த 30 பூத்களில் கடந்த 30ம் தேதியும், 9 பூத்களில் நேற்றும் மறுவாக்குப்பதிவு நடந்தது. 30ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 72.70 சதவீதம், நேற்று நடந்த வாக்குப்பதிவில் 59.42 சதவீதம் வாக்குகள் பதிவானது. இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக அந்தந்த ஒன்றியங்களில் 315 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைத்து சீல் வைத்திருந்தனர். மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை இன்று(2ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கே வேட்பாளர்கள், முகவர்கள் மையங்களுக்கு வந்து விட்டனர். அவர்களில் அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டும் தீவிர சோதனைக்கு பின் உள்ளே அனுப்பப்பட்டனர். வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்களின் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் மேஜைகளுக்கு கொண்டு வரப்படும். மேஜையில் வைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாக்குச் சீட்டுகள் தனித்தனியாக பிரிக்கப்படும். பின்னர் 4 பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகள் எண்ணும் பணி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஏற்பாடுகளை முறையாக செய்யாததால் பல இடங்களில் வாக்கு எண்ணும் பணியில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் திட்டமிட்டபடி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கவில்லை. திருவாரூர் திருவிக அரசு கல்லூரி மையத்தில் காலை 7.45 மணிக்கு ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் போலீசார் சோதனை செய்து முகவர்களை உள்ளே அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 8.30 மணிக்கு தான் முகவர்கள் முன்னிலையில் பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டு வாக்கு எண்ணும் பணி துவங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலம்புரி வடுநாதர் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்ய தாமதமானதால் 40 நிமிடம் வாக்கு எண்ணும் பணி தாமதமானது. திருச்சி மாவட்டம் மணப்பாறை, வையம்பட்டி ஒன்றியங்களின் ஓட்டுகள் குறிஞ்சி கல்லூரி, ஆதவன் கல்லூரி மையங்களில் செய்யப்பட்டிருந்தது. இந்த மையங்களில் 8.40 மணி வரை வாக்கு எண்ணும் பணி துவங்கவில்லை. கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை என்எஸ்என் தனியார் பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. இங்கு முகவர்கள் செல்லும் அறைகளுக்கான சரியான வழிகாட்டி பலகை வைக்கப்படாததால், முகவர்கள் கல்லூரி வளாகத்திலேயே அலைந்து, சுற்றி சுற்றி வந்தனர். இதனால் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களில் குளறுபடி காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகவே துவங்கியது.
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய வாக்குகள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறது. இங்கு தபால் வாக்குப்பெட்டியை திறக்க முயன்றபோது யாரிடமும் அதற்கான சாவி இல்லை. அந்த சாவி ஒன்றிய மேலாளரிடம் இருப்பது தெரியவந்தது. அவர் அங்கு இல்லை. எனவே அவரிடம் இருந்து சாவி வாங்கி வந்தபிறகு தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கொள்ளலாம் என ஒரு ஓரமாக எடுத்து வைக்கப்பட்டது. செய்யாறு அருகே செம்பாக்கம் ஒன்றியத்தில் பயன்படுத்தப்பட்ட தபால் ஓட்டு பெட்டியின் சாவி தொலைந்து விட்டது. இதனால் அதிகாரிகள், முகவர்கள் முன்னிலையில் தபால் ஓட்டுப்பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய ஓட்டுக்கள் ஜெயங்கொண்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கே ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்தனர். அவர்களுக்கு ஓட்டு எண்ணும் மையத்தில் டிபன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உணவு வழங்கப்படாததால் வாக்கு எண்ணும் பணியை அலுவலர்கள் புறக்கணித்தனர். இதனால் அவசர அவசரமாக உணவு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து 9.20 மணிக்கு தான் வாக்கு எண்ணிக்கை துவங்கியது. அதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை ஆயக்காரன்புலத்தில் நடந்தது. இங்கும் உணவு வழங்காததால் அலுவலர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் 9.30 மணி வரை இங்கு வாக்கு எண்ணிக்கை துவங்கவில்லை.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றிய ஓட்டுகள் அங்குள்ள பள்ளியில் எண்ணப்படுகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு காலையில் இட்லி, பொங்கல் வழங்கப்பட்டது. இதற்கு சாம்பார் போதுமான அளவு வழங்கப்படவில்லை. இதனால் வெறும் இட்லியை அலுவலர்கள் சாப்பிட்டனர். இதனால், வாக்கு எண்ணிக்கை தாமதமானது.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்துக்கான வாக்கு எண்ணிக்கை குண்டூர் எம்ஐடி கல்லூரியில் நடந்தது. இங்கு அலுவலர்களுக்கு டிபனுடன் வழங்கப்பட்ட சட்னி கெட்டுப்போய் இருந்தது. இதை சாப்பிட்ட ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கும்பகோணம் அரசு கல்லூரி மையத்தில் காலை 9.45 மணி வரை உணவு வழங்கவில்லை. அலுவலர்கள் வெளியே சாப்பிட கிளம்பினர். அவர்கள் வௌியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பட்டினியுடனே அவர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அவிநாசி பெரியபாளையத்திலும் காலை உணவு வழங்காததால் அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பல இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் உணவு வழங்கப்படவில்லை. இதனால் அவர்களும் அவதிக்கு ஆளாகினர்.
இப்படி பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை துவங்கி நடந்து வருகிறது. இதில் பல இடங்களில் மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு உறுப்பினர் பதவி வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். பல இடங்களில் அதிமுகவும் முன்னணியில் இருந்தது. எனினும் முழு முடிவு தெரிய இன்று மாலை ஆகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தபால் வாக்கிலும் குளறுபடி தபால் வாக்குடன் படிவம் 16ஐ இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இவ்வாறு இணைக்கப்படவில்லை. இதனால் இந்த வாக்குகளை எண்ணுவதா, வேண்டாமா என்ற குழப்பம் அலுவலர்கள் மத்தியில் ஏற்பட்டது. கடைசியாக பார்த்துக்கொள்ளலாம் என்று பல இடங்களில் வாக்குச்சீட்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கொடைக்கானலில் இவ்வாறு படிவம் இணைக்காத 17 தபால் ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. வில்லிவாக்கத்திலும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு செலுத்தப்பட்ட 19 தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்தது. அதில் 515 மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக 65 இடங்களிலும், அதிமுக 40 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது. 5090 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் திமுக 120 இடங்களிலும், 96 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் விறு விறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. சேலத்தில் 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 3, அதிமுக, பாமக 1 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அதேபோல தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.