வாக்கு பெட்டிகளை பள்ளியில் வைத்து பூட்டிச்சென்ற அதிகாரிகள்
1/1/2025 2:37:15 PM
சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கலங்கல் ஊராட்சி துவக்கப் பள்ளியில் 3வது வார்டு வாக்குச் சாவடி எண் 133ல் நேற்றுமுன்தினம் வாக்குப் பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த பின்னர், அதே பள்ளியில் அமைந்துள்ள மேலும் இரண்டு வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்திய பெட்டிகள் மற்றும் உபகரணங்களை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எடுத்துச் சென்றனர்.
தேர்தல் நாளன்று அலுவலர்களுக்கு உணவு வழங்கிய ஓட்டல் கடைக்காரர் பாத்திரங்களில் ஒன்றிரண்டை காணவில்லை என்று நேற்று காலை ஊராட்சி அலுவலரிடம் பள்ளியின் சாவியை வாங்கி வந்து பள்ளியைத் திறந்து பாத்திரங்களை தேடியுள்ளார். அப்போது 133ம் எண் வாக்குச் சாவடி அமைந்திருந்த வகுப்பு அறையில் இருந்த இரண்டு சாக்கு பையை பிரித்து பார்த்த போது இரண்டு வாக்குப் பெட்டிகள் இருந்துள்ளது. இதுபற்றி ஊராட்சி செயலர் சண்முகவேலுவிடம் தெரிவித்துள்ளார். அவர் வந்து பார்த்து விட்டு சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதுபற்றி அறிந்ததும் அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. மாலை 6 மணி வரை போலீசார் வராததால் அரசியல் கட்சியினர் பள்ளியில் அமர்ந்து தர்ணா செய்தனர். ஊராட்சி செயலர் வகுப்பறையைத் திறந்து வாக்குப் பெட்டிகளை அரசியல் கட்சியினருக்கு காண்பித்தார். அதில் ஓட்டுச் சீட்டுகள் இல்லை, காலி பெட்டியாக இருந்தது. இதன்பிறகு பரபரப்பு அடங்கியது.