தேசிய போர் நினைவிடத்தில் முப்படை தலைமை தளபதி மரியாதை
12/31/2019 5:09:47 PM
புதுடெல்லி: டெல்லியில் இன்று தேசிய போர் நினைவிடத்தில், முப்படைகளின் தலைமை தளபதியாக நாளை பதவியேற்க உள்ள பிபின் ராவத், தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமையகத்திற்கு அதன் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். முப்படைகளின் தலைமை தளபதி பதவி ஏற்பு டெல்லியில் நாளை நடக்கவுள்ள நிலையில், ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து பிபின் ராவத்துக்கு ராணுவ மரியாதையுடன் பிரியாவிடை உபசரிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பிபின் ராவத் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்று இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பின் நிருபர்களிடம் பிபின் ராவத் கூறுகையில், ‘‘ராணுவ தளபதி பொறுப்பிலிருப்பது இன்றே கடைசி. இந்த நேரத்தில் ராணுவத்தில் உள்ள அனைவருக்கும், குறிப்பாகக் கடினமான நேரங்களில் உடனிருந்த அனைவருக்கும் எனது நன்றி. பாகிஸ்தான், சீன எல்லைகளில் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதா? என்று கேட்கப்படுகிறது. ஆம், அனைத்தும் தயார் நிலையில் உள்ளன’’ என்றார். இதற்கிடையே பிபின் ராவத் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து விமர்சித்ததால், பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்திய வரலாற்றிலே ராணுவ தளபதி அரசியல் பேசியது அதுவே முதல் முறை. ராணுவ தளபதி பொறுப்பிலிருந்தவர் இதுபோன்ற கருத்தைக் கூறியதற்காக, அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் ராணுவ தளபதி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.