மகாராஷ்டிரா மாநில முதல்வர் அலுவலகத்தில் பீதி: 3 பாஜ அமைச்சர்களை காலி செய்த அறை எண்: 602
12/31/2019 5:07:40 PM
மும்பை: மகாராஷ்டிர மாநில முதல்வர் அலுவலகத்தில் அறை எண்: 602, ஏற்கனவே 3 பாஜ அமைச்சர்களை காலி செய்ததாக கூறப்படுவதால், துணை முதல்வர் அஜித்பவாரும் அந்த அறைக்கு செல்ல மறுத்து வருகிறார். இதனால், முதல்வர் அலுவலக அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். இவருக்கு மகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் உள்ள அறை எண்: 602 ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் அதனை ஏற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு பெரிய கதை உள்ளதாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர்.
முதல்வர் அலுவலகத்தின் 6வது மாடியில் 3,000 சதுரஅடியில் உள்ள அறை எண்: 602-ல் பிரம்மாண்ட கூட்ட அரங்கம், உட்புற கேபின், அலுவலக ஊழியர்களுக்கு தனி அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த 6வது மாடி தான் அரசின் அதிகார மையம். காரணம், இங்கு வழக்கமாக முதல்வர், இதற்கடுத்த இடத்தில் இருக்கும் மூத்த அமைச்சர், தலைமை செயலாளர் ஆகியோரின் அலுவலகங்கள் இருக்கும். கடந்த 2014ம் ஆண்டு பாஜகவின் சிறுபான்மை, வருவாய் துறை அமைச்சர் ஏக்நாத் காத்சேவிற்கு 602ம் எண் அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் இவர், சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கில் சிக்கி அடுத்த 2 ஆண்டுகளில் தனது பதவியை இழந்தார்.
அதன்பின், ஒருமாதம் அந்த அறை காலியாக இருந்தது. எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், விவசாயத்துறை அமைச்சர் பாண்டுரங் பண்ட்கருக்கு ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், மே 2018ல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதன்பிறகு நடப்பாண்டு ஜூன் வரை அறை எண்: 602 காலியாகவே இருந்தது. தொடர்ந்து பாஜக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அனில் பாண்டேவிற்கு விவசாயத்துறை அளிக்கப்பட்டது.
இவர், அறை எண் 602-ல் இருந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அக்டோபரில் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இவருக்கு என்ன சோதனை என்றால், விதர்பாவின் மோர்ஷி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இப்படியாக, 3 அமைச்சர்களை காலி செய்த இடம்தான் அறை எண்: 602. இந்நிலையில், முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்புக்கு பின்னர். அவருடன் பதவியேற்ற 6 அமைச்சர்களும்கூட இந்த அறையில் தங்கள் பணிகளை மேற்கொள்ளவில்லை. இவர்கள் யாருக்கும் அறை எண் 602 ஒதுக்கப்படவில்லை.
தற்போது, மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதால், இரண்டாவது மூத்த அமைச்சர் மற்றும் துணை முதல்வர் என்ற அடிப்படையில் அஜித் பவார் தான், அறை எண் 602-க்கு செல்ல வேண்டும். ஆனால், அவருக்கு முதல் மாடியில் இருக்கும் அறை தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாலும், பாஜகவுடன் சேர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் துணை முதல்வராக பதவியேற்ற 80 மணி நேரத்தில் பதவியை இழக்க வேண்டியிருந்ததால், இவரும் அறை எண்: 602-க்கு செல்வதை தவிர்த்து வருகிறார்.
இதுமற்றுமின்றி கடந்த 2014ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆட்சியின் போது அஜித் பவார் துணை முதல்வராக இருந்தார். அப்போது அறை எண் 602ல் ஓராண்டு மட்டும் இருந்தார். இந்த அறையில் இதுவரை யாரும் தங்கள் பதவிக் காலத்தை முழுமையாக அனுபவிக்கவில்லை. அதனால், அஜித் பவாரும் அந்த அறையை ஏற்க மாட்டார் என்றே முதல்வர் அலுவலக அதிகாரிகள் கூறுகின்றனர். இருந்தாலும், அஜித் பவாருக்கு பெரிய அறை தேவைப்படும் என்பதால், அறை எண் 602-க்கே ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவிப்பதால் முதல்வர் அலுவலகம் பெரும் குழப்பத்தில் உள்ளது.