அமித்ஷா குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணனுக்கு போலீஸ் வலை
12/31/2019 4:45:29 PM
நெல்லை: பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவரை உடனே கைது செய்ய வலியுறுத்தி டவுனில் அவரது வீட்டு முன்பு பா.ஜ. மற்றும் இந்து அமைப்பினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவதூறாக பேசி, இரு பிரிவினரிடையே மோதலையும், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர போலீஸ் கமிஷனரிடம் பாஜ சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் சென்னையில் டிஜிபி அலுவலகத்திலும் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, நெல்லை கண்ணன் மீது வழக்குபதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருந்தார். இதுபோல் தச்சநல்லூர், மேலப்பாளையம், டவுன், பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறு பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்ய பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பேரில் மேலப்பாளையம் போலீசார், நெல்லை கண்ணன் மீது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசியதாகவும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நெல்லை கண்ணனை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் உத்தரவின் பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி அவரது வீட்டு முன்பு பா.ஜ. மாநில இளைஞரணி செயலாளர் வேல்ஆறுமுகம், எஸ்சி அணி மாநில துணைச் செயலாளர் முருகதாஸ் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
அவர்களிடம் டவுன் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். அவரை கைது செய்யும் வரை வீட்டை விட்டு நகர மாட்டோம் என்று கூறி வீட்டு முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையிலும் பாஜ சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.