உள்ளாட்சி தேர்தலில் மக்களின் தீர்ப்பு மூலம் புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தொளி பிறக்கும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
12/31/2019 4:43:28 PM
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு எழுதும் மடல். ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றி அழித்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் காதுகளை திருகி, தேர்தல் நடத்தும்படி கண்டிப்பான உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதன்பிறகும்கூட, முழுமையாக தேர்தலை நடத்தி மக்களை சந்திக்கும் துணிவின்றி, ஊரக பகுதிகளுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தல், அதுவும் இரு கட்டமாக வாக்குப்பதிவு என மாநில தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக்கி கட்டுப்பாட்டில் கொண்டு செயல்பட்டது எடப்பாடி பழனிசாமி அரசு.
விளைந்திருக்கும் பயிரை கவனமாக அறுவடை செய்திட வேண்டும். ஒரு நெல்மணிகூட வீணாகிவிட கூடாது, ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டுவிட கூடாது என்பதை கடந்த மடலிலேயே நினைவுபடுத்தியிருந்தேன். அதற்கேற்ப கழகத்தின் சட்டத்துறையும் செயலாற்றியது. வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஆளுந்தரப்பின் முறைகேடுகளை முறியடிக்கவும், வாக்குப்பதிவின் போது, அவர்கள் நடத்தவிருக்கும் தில்லுமுல்லுகளை தடுத்திடவும் ஆர்.எஸ்.பாரதி எம்பி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
திமுக முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை, சட்டத்திற்குட்பட்டவை என்பதை நீதிமன்றம் ஏற்று கொண்டது. வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையம், வாக்குகள் பதிவான சீட்டுகளை கேமராவில் பதிவு செய்ய மறுப்பதையும் திமுக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியபோது, அதில் உள்ள நியாயத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இறுதியாக, திமுக முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உள்ளாட்சி தேர்தல் சட்டத்தின்படி அமைந்தவைதான் என்றும், அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் தேர்தல் ஆணையம் உறுதியளித்து, அதற்கான சுற்றறிக்கையையும் அனுப்பியிருப்பதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வழக்கினை முடித்து வைத்துள்ளது.
உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள சக்திகளின் எதிர்பார்ப்பாகும். இதை திமுக மட்டும் வலியுறுத்தவில்லை. பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. ஜனவரி 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 10க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள், நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்டன. நீதிபதிகள் ‘வீடியோ பதிவுக்கு 2 நாட்கள் அவகாசம் போதாதா? ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது? தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் செயல்பட வேண்டும்’ என தெரிவித்ததுடன், வீடியோ பதிவு குறித்து தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
நீதியின் மாண்பு காக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் வாக்கு எண்ணிக்கைக்கு காத்திருக்கிறது திமுக. நீதிமன்றம் அளித்த உத்தரவுகளும் தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிகளும் சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டிய இடத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் திமுக மற்றும் தோழமை கட்சிகளின் வேட்பாளர்களும், முகவர்களும் இருக்கிறார்கள். உள்ளாட்சி சட்ட விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என கவனித்து, ஆளுந்தரப்பின் அத்துமீறல்களையும் முறைகேடுகளையும் தடுத்திட வேண்டியது அவசியமாகும். அதற்கு திமுக சட்டத்துறை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும். உயர்நீதிமன்றம் அளித்துள்ள நம்பிக்கையை மக்களின் தீர்ப்பும் நிச்சயம் நமக்கு வழங்கும். புத்தாண்டில் ஜனநாயகத்தின் புத்தொளி பிறக்கும்.