நல்லதா, கெட்டதா என்பதெல்லாம் தெரியாது... 2019ல் செய்தியின் தலைப்பை ஆக்கிரமித்த தலைவர்கள்
12/30/2019 3:45:44 PM
புதுடெல்லி: இந்தாண்டு ஊடகங்களின் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்த 10 தலைவர்கள் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், அதன் பின்னணி விவரங்களில் இந்திய பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார். இவர்களின் நடவடிக்கை நல்லதா கெட்டதா என்பதையெல்லாம்விட, அவர்களின் நடவடிக்கைகள் பரபரப்பாக சர்வதேச அளவில் பேசப்பட்டன. சர்வதேச அரசியலில் வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஆதிக்கம் இருப்பது வாடிக்கையான ஒன்றானாலும்கூட, 2019ம் ஆண்டில் பல அரசியல் தலைவர்கள் பத்திரிகை, டிவி ஊடங்களின் வாயிலாக செய்திகளின் தலைப்புகளை வெகுவாக ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் தங்கள் பெயர்களை முன்னிலைபடுத்தும் விதமாக செய்திகளை அவ்வப்போது கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதுபோன்ற செய்திகள் சர்வதேச கவனத்தையும் பெற்று வருகின்றன.
அவற்றில் சில விஷயங்கள் நல்ல காரணங்களுக்காகவும், சில விஷயங்கள் தவறான முடிவுகளை கொண்டிருப்பதையும் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை வளர்ச்சியின் பாதையில் பிரதமர் மோடி வழிநடத்தி வருவதாக செய்தி பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், அவர் மீதான எதிர்ப்பும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. சரி... 2019ல் செய்திகளின் தலைப்பை ஆக்கிரமித்த தலைவர்கள் பட்டியலில், சர்வதேச அளவில் முதல் 10 இடங்களை பிடித்த தலைவர்கள் குறித்த பின்னணி வருமாறு:
நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் மோடி இந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலை இரண்டாவது முறையாக வென்றது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஹெரால்ட் பத்திரிகையின் வாசகர்களால் ‘உலகின் மிக சக்திவாய்ந்த தலைவராக’ தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதும், இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதும் இந்தியாவில் ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜ கட்சி, சமீபத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்திய செய்தி, நாடு முழுவதும் போராட்டங்களை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து முஸ்லிம் அல்லாத துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை திரும்பப் பெறுமாறு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரி வருகின்றனர். பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாத முகாம்களில் இந்திய விமானப்படை வழித் தாக்குதலை இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தியது. இது, உலகளவில் கவனத்தை பெற்றது. 2019 செப்டம்பரில் டெக்சாஸின் ஹூஸ்டனில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்வு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சில முக்கிய தலைவர்களுடனான சந்திப்பு சர்வதேச அளவில் பேசப்பட்டது. டிஸ்கவரி சேனலின் சாகச நிகழ்ச்சியான ஹோஸ்ட் பியர் கிரில்ஸுடன் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ சிறப்பு எபிசோடில் மோடி தோன்றியது இந்தியா உட்பட 180 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டதால் பிரபலம் அடைந்தார்.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக, அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். அமெரிக்காவின் வரலாற்றில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதியாக டிரம்ப் ஆளாகி உள்ளார். அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உனுடன் அணுசக்தி மயமாக்கல் தொடர்பான செய்திகளில் அதிகம் இடம் பெற்று இருந்தார். இரு தலைவர்களுக்கிடையில் இரண்டாவது உச்சிமாநாடு இந்த ஆண்டு பிப்ரவரியில் வியட்நாமில் நடைபெற்றது. ஆனால், எந்த ஒரு உடன்பாடும் இல்லாமல் முடிந்தது.
ஜூன் 30ம் தேதி, தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் முன்னிலையில், கொரிய ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலத்தில் (டி.எம்.ஜெட்) டிரம்ப் மற்றும் கிம் ஜாங் ஆகிேயார் ஆலோசனை நடத்தியது முக்கியமாக பேசப்பட்டது. ஈரான் மீதான அமெரிக்க கொள்கை முடிவுகள், அமெரிக்க-சீனா வர்த்தகப் போர் ஆகியன முக்கிய செய்திகளாகின. சிரியாவில் இட்லீப் மாகாணத்தில் அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு பயந்து ஐ.எஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டார். பக்தாதியைக் கொல்லும் பணியில் 4 நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த நாயை `ஹீரோ டாக், திறமை மிக்க நாய்’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளினார்.
இம்ரான் கான்
முன்னாள் கிரிக்கெட் வீரரான பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு - காஷ்மீர் பிரச்னையில் உலகளாவிய ஆதரவைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். 2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இம்ரான் கான் ஊடகங்களில் உரையாற்றினார். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை அவர் நிராகரித்தார். இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தனை சமாதானத்தின் ஒரு முன்னேற்றமாக, அவரை விடுவித்ததற்காக இம்ரான் கான் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டார். இந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஐ.நா கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கட்டுப்பாடுகளை நீக்கவில்லை என்றால், பயங்கர பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.
இதற்கிடையில், பயங்கரவாத நிதி மற்றும் பணமோசடிக்கு எதிராக நாடு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், ‘எப்ஏடிஎப்’ தடுப்புப்பட்டியலில் வைக்கப்படுவதைத் தவிர்க்க பாகிஸ்தான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில், 6 பில்லியன் டாலர் சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) கடன் பெற்றிருந்தாலும், அடுத்த தவணையாக 452.4 மில்லியன் டாலர்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது.
கிம் ஜாங் உன்
பிப்ரவரி மாதம் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான உச்சிமாநாடு முறிந்ததிலிருந்து பேச்சுவார்த்தைகள் முறிந்தன. அணுசக்தி விவகாரத்தில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதால், வடகொரிய கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்தது. அணுசக்தி மயமாக்கல் பேச்சுவார்த்தைக்கு ஆண்டு இறுதி காலக்கெடுவை கிம் நிர்ணயித்துள்ளார். அந்த காலக்கெடுவை அமெரிக்கா புறக்கணித்தது. இந்த ஆண்டு அக்டோபரில், கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையில் இரண்டு சந்தேகத்திற்குரிய ஏவுகணைகளை கடலுக்குள் அமெரிக்கா வீசியது. சமீபத்தில் வட கொரிய அதிபர் கிம், ஒரு வெள்ளை குதிரையில் ஒரு மலையில் சவாரி செய்தும், அவ்வப்போது ஏவுகணைகளை வான்வெளியில் ஏவியும் சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளாக இடம்பெற்றார்.
ஜி ஜின்பிங்
ஹாங்காங்கில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆசிய நிதி மையத்தில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர கோரிக்கை விடுத்தார். இந்தாண்டு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் அதிக ஊடக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக் கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் ஜின்பிங் மற்றும் டிரம்ப் கையெழுத்திட உள்ளனர்.
இந்த ஆண்டு அக்டோபரில் ஜின்பிங், இந்தியப் பிரதமர் மோடியை தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்தார். காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் பாதித்துள்ள நிலையில், இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. சீனாவில் அதிகளவிலான பத்திரிக்கையாளர்களை சிறைபிடித்து வைத்திருத்தல், சீனாவில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரான நடவடிக்கை, ஹாங்காங் பிரச்னையில் சீனாவின் செயல்பாடுகள் சர்வதேச கவனத்தை ஈர்த்தன.
பர்வேஸ் முஷாரஃப்
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரஃப் இந்த ஆண்டு ஒரு சிறப்பு நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதோடு, உயர் தேசத்துரோகம் மற்றும் அரசியலமைப்பை முறியடித்த குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஜூலை 31, 2009ல், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 14 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 2007 நவம்பரில் ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் அவசரநிலையை அறிவித்த நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
72 ஆண்டுகால வரலாற்றில் ஏறக்குறைய அதன் சக்திவாய்ந்த ராணுவத்தால் ஆளப்பட்ட ஒரு நாட்டில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முஷாரப்பின் தண்டனைக்கு சில நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட தீர்ப்பு, முன்னாள் ஜனாதிபதியின் சடலத்தை பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஒருவர் கூறினார். இருந்தும், இந்த வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து முஷாரஃப் லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பித்துள்ளார்.
போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் டிச. 12ம் தேதி நடந்த தேர்தல் வாக்குப்பதிவுகளின் முடிவுகளில் மொத்தமுள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களையும் தொழிலாளர் கட்சி 203 இடங்களையும் கைப்பற்றின. சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சி மிகப் பெரும் வெற்றி பெற்றது. பிரிட்டனைப் பொறுத்தவரை பிரெக்ஸிட் (Brexit) விவகாரம் பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அந்நாட்டின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த விவகாரத்துக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது பேசிய போரிஸ், ``எனக்கு வாக்களிக்க மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப நடந்துகொள்வேன். விரைவில் பிரெக்ஸிட் நிறைவேற்றப்படும். தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்கள் முதல்முறையாக கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்” என்றார். இவரது தேர்தல் வெற்றிக்கு காரணம், ‘நோ-டீல் பிரெக்ஸிட்’ என்ற முழக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக உறுதியளித்ததன் பேரில் இங்கிலாந்து பிரதமரானார்.
பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது சமீபத்தில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. நெதன்யாகு அரசுக்கு எதிரான 63 பக்க குற்றச்சாட்டை, இஸ்ரேலிய அட்டர்னி ஜெனரல் அவிச்சாய் மண்டெல்பிட் விசாரித்தார். பிரதமரும் அவரது மனைவி சாராவும் அரசியல் உதவிகளுக்காக பல கோடி மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை ஏற்றுக்கொண்டதாகவும், நேர்மறையான செய்திகளை வெளியிட இரண்டு ஊடக நிறுவனங்களில் தலையிட்டதாகவும் நெதன்யாகு மீது வழக்குகள் பதியப்பட்டது.
கடந்த 26ம் தேதி இஸ்ரேலில் ஆளும் லிக்குட் கட்சித் தலைமைக்கு நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றார். ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ள அவர், வரும் மார்ச்சில் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், இஸ்ரேலில் மிக நீண்ட காலமாக பிரதமர் பதவியை வகித்து வரும் அவர், வரும் தேர்தலில் லிக்குட் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்பார்.
முகமது பின் சல்மான் அல் சவுத்
சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி பத்திரிகையாளரும், இளவரசரின் விமர்சகருமான ஜமால் கஷோகி கொலையில் நேரடி தொடர்பு இருப்பது உறுதியானது. கஷோகியைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 15 பேரில் ஏழு பேர் முகமது பின் சல்மானின் தனிப்பட்ட மெய்க்காப்பாளரின் உறுப்பினர்கள் என்று ஊடக அறிக்கைகள் கூறியுள்ளன. கஷோகியின் கொலையில் பங்கு வகித்ததற்காக ஐந்து பேருக்கு இப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் உற்பத்தி கிணறுகள் மீது ட்ரோன் தாக்குதலால் தட்டுப்பட்டபோது சவுதி அரேபியா முக்கிய செய்தியானது. இது, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது. சவுதி கலாசாரத்தில் புரட்சிகர மாற்றங்களை சல்மான் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக சவுதி பெண்களுக்கு ஓட்டல் அறைகளை வாடகைக்கு விட அனுமதிப்பது, பாஸ்போர்ட் வழங்கல், ஆண் பாதுகாவலர் வெளிநாடு செல்லலாம் போன்றவை முக்கியமாக பேசப்பட்டது.
ஹசன் ரூஹானி
ஈரானின் தொடர்ச்சியான சட்டவிரோத அணுசக்தி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் வேறு சில நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் இந்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. இது, அந்நாட்டின் மீதான பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத் தடைகள், அமெரிக்காவுடனான பரிவர்த்தனைகளுக்கு தடை மற்றும் ஈரானிய விமான நிறுவனங்களுக்கு விமானம் மற்றும் பழுதுபார்க்கும் பாகங்களை விற்பனை செய்வதற்கான தடை ஆகியன அடங்கும்.
சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிலையங்களை ஈரான் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானியைச் சுற்றி சர்ச்சைகள் சூழ்ந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இந்த குற்றச்சாட்டை கிளப்பினாலும்கூட, அதற்கான ஆதாரங்களை வௌியிட வேண்டும் என்று ரூஹானி கேட்டுள்ளார். இதற்கிடையே இரண்டு எண்ணெய் டேங்கர்களை ஈரான் கைப்பற்றியது. அதில் ஒன்று இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்டது. மற்றொன்று லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டது.