வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கல் அதிமுக முன்னாள் சேர்மன் வீட்டில் ரூ.38 லட்சம், மது பாட்டில் பறிமுதல்
12/24/2019 2:46:32 PM
சாயல்குடி: அதிமுக முன்னாள் சேர்மன் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.38 லட்சம் மற்றும் 1,192 வெளி மாநில மது பாட்டில்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் பாலு. அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த முறை கமுதி யூனியன் சேர்மனாக இருந்தார். இவரது தந்தை தர்மலிங்கம் அரசு ஒப்பந்ததாரராகவும் பைனான்சியராகவும் உள்ளார். தற்போது பாலு கமுதி அருகே மண்டலமாணிக்கம் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும் இவரது தாயார் ராணியம்மாள் மண்டலமாணிக்கம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் தடபுடல் விருந்துகளுடன், வாக்காளர்களை கவனித்து, கவரும் பணியில் தொடர்ந்து இவர்கள் ஈடுபட்டுவருவதாக புகார்கள் எழுந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் எஸ்பி வருண்குமார் உத்தரவின்படி, போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பாலுவின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தி, அவரது வீட்டில் இருந்து ரூ.38 லட்சத்து 67 ஆயிரத்து 300 மற்றும் 1,192 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் கமுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.