வீட்டுக்கு ஒரு சந்தன மரம் வேட்பாளர் வாக்குறுதி
12/19/2019 4:43:58 PM
முத்துப்பேட்டை: வீட்டுக்கு ஒரு சந்தன மரக்கன்று வழங்குவேன் என்று ஜாம்புவானோடை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆசிரியை வித்தியாசமாக வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டு வருகிறார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை அகிலா. இவர் அதேபகுதி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வழக்கமாக சாலை அமைப்பேன், தெரு விளக்குகளை எரிய வைப்பேன் என்று தான் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிப்பார்கள். ஆனால் இவர் வித்தியாசமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.
கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்படும். இந்த கிராமம் சந்தன மரம் வளரும் பகுதி என்பதால் வீட்டுக்கு ஒரு “சந்தன மரக்கன்று” வழங்கப்படும். கிராமத்தில் முக்கிய பகுதிகளில் “கண்காணிப்பு கேமிரா” பொருத்தப்படும். புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு அரசு உதவியுடன் பட்டா பெற்று தரப்படும். வீட்டு விசேஷங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்புடும். ‘சர்க்கரை நோயாளிகளுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு பல வாக்குறுதிகளை நோட்டீசாக அச்சடித்து வீடு வீடாக வழங்கி, வாக்கு சேகரித்து வருகிறார்.