பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து
12/13/2019 2:10:42 PM
கரூர்: பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிடும், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து இருப்பதாக மாநில தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறியுள்ளார். லோக்சபா, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்வது கட்டாயமாக இருந்தது. இதனவால், அவர்கள் எவ்வளவு சொத்து வைத்துள்ளனர். அடுத்த முறை தேர்தலில்போட்டியிடும்போது எவ்வளவு சொத்து வைத்துள்ளனர் என்ற விவரங்கள் எல்லாம் நமக்கு தெரிந்து விடும். அதேபோலத்தான் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் சொத்துக் கணக்குகளை காட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வேட்பு மனுவுடன் ‘3ஏ’ என்ற உறுதி படிவமும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் போட்டியிடும் உள்ளாட்சி வேட்பாளர்கள் தங்களது சொத்துக்கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இந்த தகவல் மாநில தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் தாந்தோன்றி மலை ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி சேகரின் மனைவி சாந்தி போட்டியிடுகிறார். இவர் மற்றும் இவரது கணவர் பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரொக்கம் என ரூ.8கோடிேய 90 லட்சத்து 84 ஆயிரத்து 30க்கு சொத்துக்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
அதேபோல கரூர் ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் கருணாகரன், ரூ.2 கோடியே 28 ஆயிரம் என சொத்து மதிப்பை காட்டியுள்ளார். இதே பஞ்சாயத்தில் செல்லையா சிவா என்ற வேட்பாளர் ரூ.2 கோடியே 12 லட்சமும், லீலாஎன்பவர் ரூ.2 கோடியே 28 ஆயிரமும் சொத்து இருப்பதாக காட்டியுள்ளனர்.