குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது
12/13/2019 2:08:10 PM
சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணியினர் இன்று திடீர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னையில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்தது. அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மக்களவை, மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இந்த நிலையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மசோதா, மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி, 2014ம் ஆண்டு வரையில் இந்தியாவில் தஞ்சம் புகுந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்துள்ளது. இலங்கை தமிழர்களும் இந்த மசோதாவால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மசோதாவை எதிர்த்து மக்களவை, மாநிலங்களவையில் திமுக தனது கடுமையான எதிர்ப்பு குரலை பதிவு செய்தது. இந்த சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு அதிமுக அரசு ஆதரவு தெரிவித்தது. சிறுபான்மையினர் மற்றும் ஈழ தமிழர்களுக்கும் துரோகம் இழைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் வருகிற 17ம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு திடீரென திமுக இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. சென்னை, சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள திமுக தென்சென்னை மாவட்ட அலுவலகம் அருகே இருந்து 1000க்கும் மேற்பட்டோர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கையில் திமுக கொடிகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். அப்போது, அவர்கள் மத்திய பாஜ மற்றும் தமிழக அதிமுக அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி சென்றனர்.
சைதாப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்ற திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். சைதாப்பேட்டை வளைவு அருகே போலீசார் பேரிகார்டு அமைத்து திமுகவினர் ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர். அப்போது திமுகவினர் பேரிகார்டை நகர்த்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் திமுகவினர் சாலையின் ஒருபக்கம் வழியாக அண்ணா சாலையில் ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து உதயநிதி தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இன்று காலை திமுக இளைஞர் அணியினர் கண்டன ஊர்வலம் நடத்தினர். சில இடங்களில் ஊர்வலமாக சென்ற இளைஞர் அணியினரை போலீசார் மறித்து, கைது செய்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதசார்பின்மை, சமஉரிமை, சகோதரத்துவம், சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் தகர்த்துள்ள மத்திய பாஜக அரசும், அதற்கு துணை நின்று சிறுபான்மையினர், ஈழத்தமிழர்களுக்கு அதிமுக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது. இந்த தமிழர் விரோத குடியுரிமை மசோதாவுக்கு மாநிலங்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிமுக அளித்த ஆதரவே வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது இதற்கு திமுக கடும் கண்டனத்தை தொிவித்துக் கொள்கிறது” என்றார்.