உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை எதிரொலி: கூட்டணி குறித்து பேச கட்சிகள் தீவிரம்
12/12/2025 3:11:11 PM
சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், கூட்டணி குறித்து பேச கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் அவர்களின் சொந்த மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளாட்சி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையில் இடஒதுக்கீட்டை மேற்கொள்ளாத மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக திமுக உட்பட 5 கட்சிகள் மற்றும் வாக்காளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தேர்தல் நடத்த வேண்டும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 3 மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தேர்தலில் எந்தெந்த வார்டுகளில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளது. அதன்படி, திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக சார்பில் அதன் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜ, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களே கூட்டணி குறித்து இறுதி முடிவு செய்வார்கள் என்று அதிமுக தலைமை ஏற்கனவே அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து, தாங்கள் போட்டியிடும் வார்டுகள் குறித்த விவரத்தை மாவட்ட வாரியாக கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டணி குறித்து இன்னும் ஓரிரு நாளில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தங்கள் சொந்த மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளாட்சி பணிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்க வேண்டிய சீட்டுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. கடந்த மூன்று நாட்களில் 16,654 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். கட்சிகள் சார்பில் பெரிய அளவில் யாரும் இன்னும் மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற 16ம் தேதி (திங்கள்) வேட்புமனு தாக்கல் முடிகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. வருகிற சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. கட்சிகள் சார்பில் இன்னும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்த மூன்று நாட்களுக்குள் கூட்டணி முடிவு செய்யப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன. அதனால், இன்று அல்லது நாளைக்குள் கூட்டணி குறித்து இறுதி செய்யப்பட்டு, வருகிற 16ம் தேதி (திங்கள்) வேட்புமனு இறுதி நாளன்று கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.