ராகு-கேது பூஜை பிரசாதத்தில் மோசடி காளஹஸ்தி கோயில் அர்ச்சகர் சஸ்பெண்ட்
12/12/2025 3:06:09 PM
காளஹஸ்தி: ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பஞ்ச பூதங்களில் வாயு ஸ்தலமாகவும், ராகு, கேது, சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்யும் தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ருத்ராபிஷேகம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் மற்றும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகள் செய்து பிரசாதங்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்து பக்தர்களிடம் மோசடி செய்வதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து விசாரிக்க மாநில அறநிலையத்துறை ஆணையாளர் அலுவலகம் உத்தரவிட்டது. இதையடுத்து நடத்திய ஆய்வில், கோயிலுக்கு தொடர்புடைய ஒரு சில இணையதளங்கள் போலியாக செயல்படுவது தெரிய வந்தது. அதில் உள்ள செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டபோது கோயில் அர்ச்சகரான சூரியநாராயணமூர்த்தி பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் சாதாரண பக்தர் போல் பேச்சுக்கொடுத்ததில் ராகு-கேது பூஜைக்கு ரூ.2500 கூடுதலாக ரூ.500 என்று மொத்தம் ரூ.3 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தினால் பிரசாதம் அனுப்பப்படும் என்றாராம். இதையடுத்து ஆந்திர வங்கிக்கு தொடர்புடைய அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் கடந்த ஓராண்டிற்கான பண பரிவர்த்தனையில் ரூ.3 ஆயிரம் வீதம் அதிகளவில் பண பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோயில் அர்ச்சகர் சூரிய நாராயணமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து நிர்வாக அதிகாரி சந்திரசேகர் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.