மூதாட்டியை கொலை செய்த மாணவன் கைது
12/12/2025 2:58:56 PM
திட்டக்குடி: வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்த மாணவனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள மேல்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி மனைவி பொன்னம்மாள் (65). இவர் கடந்த 1ம் தேதி மர்மமான முறையில் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 4ம் தேதி பொன்னம்மாள் இறந்தார்.
பொன்னம்மாளின் வீட்டின் அருகே கீழகல்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் பொன்னம்மாள் வீட்டு தோட்டத்தில் விளைந்துள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சம் ஆகிய பழங்களை வாங்கி செல்வது வழக்கம். பழம் வாங்குவதில் ஏதேனும் பிரச்னை இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் மாணவ, மாணவிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது கீழகல்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன், சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு பணத்தை பொன்னம்மாளிடம் கொடுத்து அவரிடம் இருந்து பழங்களை வாங்கி சாப்பிட்டுள்ளான். ஆனால் மாணவன் கொடுத்த பணம் செல்லாது என தெரிந்த பொன்னம்மாள் பள்ளிக்குள் சென்று அந்த சிறுவனிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அதற்கான ரூபாயை பொன்னம்மாள் பெற்றுக்கொண்டார்.
பின்னர் சிறுவன் செலவுக்கு தாயிடம் பணம் கேட்டுள்ளான். ஆனால் அவரது தாய் கொடுக்கவில்லை. பொன்னம்மாள் அதிக பணம் வைத்திருந்ததை பார்த்த சிறுவன் சம்பவத்தன்று இரவு பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று பணத்தை திருட முயற்சி செய்துள்ளான். இதனை பார்த்த பொன்னம்மாள் சிறுவனை பிடித்து கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த சிறுவன் அருகிலிருந்த டார்ச் லைட்டை எடுத்து பொன்னம்மாள் தலையில் அடித்துள்ளான். ரத்தவெள்ளத்தில் பொன்னம்மாள் மயங்கி விழுந்தார். உடனே சிறுவன் அங்கிருந்த செல்போன் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை செய்ததில் செல்போனை பயன்படுத்திய சிறுவனின் தாய் மாட்டிக்கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சிறுவன் நேற்று வடகரா பூண்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜிடம் சரணடைந்தான். ராமநத்தம் போலீசார், அவனிடம் விசாரித்ததில், பொன்னம்மாளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து சந்தேக மரண வழக்கை கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை கைது செய்தனர். பின்னர் மாணவன் கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.