விவசாயம் செழிக்கவும் நோயின்றி வாழவும் மண்ணை மலையாக்கி வழிபாடு: மேலூர் அருகே விநோதம்
12/11/2025 3:48:25 PM
மேலூர்: கார்த்திகையை முன்னிட்டு மண்ணை மலையாக்கி வழிபடும் விழா மதுரை அருகே மேலூரில் நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் உள்ள பெருமாள்மலை முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அப்போது கோயிலை ஒட்டியுள்ள சேங்கை எனப்படும் ஓடையில் இருந்து கைப்பிடி மண்ணை எடுத்து அருகில் போட்டு இறைவனை வழிபாடு செய்வார்கள். அத்துடன் மிளகு, உப்பும் அந்த மண்ணில் போடப்படும். இவ்வாறு செய்தால் விவசாயம் செழிப்பதுடன், நோய் நொடியின்றி வாழலாம் என்பது மக்களின் நம்பிக்கை.
இதன்படி நேற்று கார்த்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், கைப்பிடி மண்ணை எடுத்துப்போட்டு இறைவனை வழிபட்டனர். இரவில் இங்குள்ள பெருமாள் மலை மீது தீபம் ஏற்றியும் ஏராளமானோர் வழிபட்டனர். இதே போல் மேலவளவு கருப்பு கோயிலில் மிகவும் செங்குத்தான மலை மீது ஏறி, அங்கிருந்து கீழ் நோக்கி கற்களை வீசி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். ஆட்டுக்குளம் பெருமாள்மலையில் பக்தர்களின் வழிபாடு நேற்று காலை துவங்கி, இரவு வரை நடந்தது. நேற்று இரவு இம்மலையில் உள்ள பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. உலகநாதபுரம் சக்திவேல் முருகன் கோயில் முன்பு சொக்கப்பனை கொளுத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலூரைச் சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள அனைத்து முருகன் கோயில்களின் முன்பும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு கார்த்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.