ஜோலார்பேட்டையில் பயங்கரம்: சென்னை தொழிலாளியை கொன்று உடலை கிணற்றில் வீசி சென்றனர்
12/11/2025 3:41:47 PM
ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரி கிராமத்தில் கடந்த 9ம் தேதி விவசாய கிணற்றில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றினர். வாலிபரை கொன்று, அவரது இடுப்பில் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை கொன்றது யார் என்று விசாரித்தனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னை சைதப்பேட்டையை சேர்ந்த சரவணன், விஜயகுமார் ஆகியோரை கோழி கூண்டு அமைக்க வெல்டிங் வேலை செய்வதற்காக அழைத்து கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு வந்ததாக தெரிகிறது. கடந்த 8ம் தேதி சரவணனின் உறவினர்கள், அவரது செல்போனுக்கு தொடர்பு ெகாண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து விஜயகுமாரிடம் கேட்டபோது சரிவர பதில் கூறவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த சரவணனின் உறவினர்கள் சென்னை சைதாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசன், விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர். ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் சடலமாக கிடந்தவர் சரவணனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், இருவரையும் நேற்று மாலை ஜோலார்பேட்டை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சரவணனை, விஜயகுமார் அடித்து கொன்றது தெரியவந்தது.