கோயம்பேடு பகுதிகளில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
12/11/2025 3:34:29 PM
அண்ணாநகர்: கோயம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலம் அடுத்த பாடிகுப்பம், வண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (எ) அருணா (24). இவர் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இவர்மீது கடந்த 2017-ம் ஆண்டில் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிதடி மோதல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் அருணாசலத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க இன்ஸ்பெக்டர் தீபக்குமார் கமிஷனருக்கு பரிந்துரைத்தார். இந்நிலையில், குற்றச் சம்பவங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அருணாசலத்தை நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோயம்பேடு போலீசார் அருணாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.