தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை
12/10/2025 4:01:25 PM
சென்னை: தமிழகம், புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு மே மாதத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். இருப்பினும் இந்த ஆண்டுக்கான இயல்பு மழை அளவை இன்னும் எட்டவில்லை. இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்துள்ளது.
இதற்கிடையே, வெப்ப சலனம் காரணமாக இலங்கைக்கு தென் கிழக்கு, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வட மேற்கு திசையில் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகரும் பட்சத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 2.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்றைய அதிகபட்ச வெயில் 91.4 டிகிரி பாரன்ஹீட் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பதிவானது. அதற்கடுத்தபடியாக நாமக்கல், சேலத்தில் 89.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியின் ஒரு சில பகுதிகள், உள்மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.