நகைப்புக்குள்ளாகிறது தேர்தல் உள்ளாட்சி பதவிகள் பல லட்சத்துக்கு ஏலம்...கடும் போட்டியால் விலைகள் கிடு கிடு உயர்வு
12/10/2025 2:56:11 PM
சென்னை: தமிழகத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தற்போது பல இடங்களில் ஏல முறையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த தேர்தல் கேலிக்கூத்தாகியுள்ளது. பல லட்சம் கொடுத்து பதவியை ஏலம் எடுத்தவர்கள் மக்களுக்கு நன்மை செய்வார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் வரும் 30ம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இந்நிலையில் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில் பணபலம் கொண்டவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியின்றி தேர்வு செய்யும் வகையில் பதவிகளை விலை கொடுத்து வாங்கும் போக்கு தொடர்ந்து நடக்கிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுகுப்பம் ஊராட்சியில் தலைவராக இருந்த அதிமுக பிரமுகரும், துணைதலைவராக இருந்த தேமுதிக பிரமுகரும், தற்போது தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது. அதன்படி நேற்று தலைவர் பதவிக்கான வேட்பு மனு வாங்குவதற்கு முன் அங்குள்ள ஒரு கோயிலில் கிராம மக்கள் ஒன்று கூடினர். இதில் ஊருக்கு கோயிலை யார்? கட்டி தருகின்றாரோ, அவரை தலைவராக தேர்வு செய்யலாம் எனக்கூறி விவாதம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு தலைவர், துணைத்தலைவராக இருந்தவர்களே போட்டியிடலாம் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் ஏலம் போனதாக தெரிகிறது.
இந்த தகவல் வாட்ஸ்அப்பில் வீடியோவாக பரவியது. இது குறித்து ஏலம் கேட்டதாக கூறப்படும் சக்திவேலிடம் கேட்டபோது: இதுபோன்ற ஏலம் நான் கேட்கவில்லை. சென்ற முறை தலைவராக இருந்தேன். அதனடிப்படையில் ஊரில் உள்ள கோயிலை பொதுமக்களுக்காக கட்டி வருகிறேன். தற்போது தேர்தலில் நிற்பதால், மிகவும் பழமையான கோயிலை கட்டி தருவதாக வாக்குறுதியளித்துள்ளேன். நான் ஏலம் எதுவும் கேட்கவில்லை. எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ஒருசிலர் ரூ.50 லட்சம் ஏலம் எடுத்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர் என்றார். ஊராட்சி தலைவர் பதவி ஏலம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிடிஓக்கள் சீனுவாசன், ரவிச்சந்திரன் நடுக்குப்பம் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் உள்ளது அரசலூர் ஊராட்சி. இங்குள்ள 4வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஒரே ஒருவர் மட்டுமே இதுவரை மனு வாங்கி உள்ளார். ஊராட்சி அலுவலகத்தில் வேறு யாரும் மனு வாங்கவில்லை.
இந்தநிலையில் அங்குள்ள கோயிலில் நேற்று இரவு ஊர் முக்கிய பிரமுகர்களின் கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது 4வது வார்டில் போட்டியின்றி உறுப்பினரை தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர் கோயிலுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை தர வேண்டும் என்று பேசப்பட்டது. இதற்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்பிய அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை விவரங்களை ரூ.1 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டவரின் அண்ணன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதைப்பார்த்ததும், எதற்காக வீடியோ எடுக்கிறாய் என்று ஊர் பிரமுகர்களில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு வீடியோ எடுத்தவர், இங்கு பேசிய விவரங்களுக்கு ஆதாரம் வேண்டாமா, நீங்கள் பணத்தை வாங்கி விட்டு இல்லை என்று சொல்லி விட்டால், என்ன செய்வது என்று கேட்டார். இதனால் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் தகராறை விலக்கி சமாதானப்படுத்தினர். இதுபற்றி தொட்டியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐ ரபீக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தை நடந்த கோயிலில் அப்போது யாரும் இல்லை. எனினும் ஊர் முக்கிய பிரமுகர்கள் சிலரை சந்தித்து, உள்ளாட்சி பதவிகளை பேரம் பேசி விற்கக்கூடாது. அவ்வாறு செய்வது சட்டப்படி தவறு. ஜனநாயகத்துக்கு எதிரானது. முக்கிய பிரமுகர்கள் நாளை(இன்று) காலை தொட்டியம் காவல் நிலையத்துக்கு வாருங்கள். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போலீசார் கூறி சென்றனர்.
இதே போல் பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் பதவிரூ.22.5 லட்சத்துக்கு ஏலம் போனது. இன்னொருவர் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் கேட்டார். ஆனால் குறைந்த விலை கேட்டவருக்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. ஆலம்பாடி ஊராட்சியை சேர்ந்த சொக்கநாதபுரம், செஞ்சேரி கிராமத்தினர் இந்த ஏலத்தை நடத்தினர். அதே நேரத்தில் ஆலம்பாடி கிராமத்தினரை இதில் சேர்க்கவில்லை. ஆலம்பாடி கிராம ஆதரவு இல்லாமல் நாம் ஜெயித்து விடலாம் என கருதி அந்த கிராமத்தை இவர்கள் புறக்கணித்து இந்த ஏலத்தை நடத்தி உள்ளனர். இந்த தகவல் ஆலம்பாடி மக்களுக்கு தெரியவந்தது. அவர்கள் நேரடியாக நேற்று முன்தினம்இரவு ஏலம் நடந்த இடத்துக்கு வந்து விட்டனர்.
எங்களுக்கு தெரியாமல் எப்படி ஏலம் விடலாம். எங்களை சேர்த்துக்கொண்டு தான் ஏலம் நடத்தவேண்டும். அந்த தொகையில் எங்கள் கிராமத்திற்கும் பங்கு வேண்டும் என கேட்டனர். இதனால் ஏலத்தில் இன்னும் ஒரு முடிவு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபோல பெரம்பலூர் மாவட்டம் பேரையூர் ஊராட்சி தலைவர் ரூ.20 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கும் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திலுள்ளது பனைகுளம் ஊராட்சி. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில், இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ₹24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மணல்பள்ளம், பனைகுளம், பித்திரமருதஅள்ளி, திருமால்வாடி, கூக்குட்ட மருதஅள்ளி கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் பனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியானது ஏலத்திற்கு எடுக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ெதாடங்கியுள்ள நிலையில், ஊராட்சி தலைவர் பதவி ₹24லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூகவலை தளங்களில் தகவல் பரவி வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு முதல் பனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலத்தில் விடப்படுகிறது. இதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தும் இமானுவேல் என்பவர் ஏலம் எடுத்தார். எந்த கட்சியும் சாராத அவர், பல நன்மைகளை செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து 2016ல் உள்ளாட்சி ேதர்தல் அறிவிக்கப்பட்ட போது, ₹35லட்சத்திற்கு ஏலம் எடுத்து ஊர்பெரியவர்களிடம் பணத்தை செலுத்தியுள்ளார். தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பணத்தை அவரிடமே திரும்ப வழங்கியுள்ளனர். தற்போதும், ஊராட்சி மன்ற தலைவருக்கான பதவி, நேற்றிரவு ஊர்பிரமுகர்கள் முன்னிலையில் ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் ₹24லட்சம் செலுத்தி இமானுவேல், ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் எடுத்ததாகவும், இதையடுத்து ஊர் கட்டுப்பாட்டின் படி, வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட்டுள்ளதும், அதை தொடர்ச்சியாக ஒருவரே ஏலம் எடுத்து வருவதும் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஊர் பிரமுகர்களிடம் கேட்டபோது, ‘‘பனைகுளம் ஊராட்சியில் 11 வார்டுகள் உள்ளது. இந்த ஊராட்சியை பொறுத்த வரையில் ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின் போதும், அனைத்து கட்சியினர், ஊராட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி அப்பகுதிக்கு நன்மை செய்யும் ஒரு நபரை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதுவரை 2 முறை தேர்தல் நடத்தாமலேயே பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுத்து உள்ளோம். இந்த முறையும் அதே ரீதியில் தேர்ந்தெடுப்போம்’’ என்றனர். இதுகுறித்து, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பணம் உள்ளவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். குறிப்பாக ஆளும் கட்சியினர் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.