பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் ரிசாட்-2பிஆர்1 நாளை விண்ணில் பாய்கிறது
12/10/2025 2:51:19 PM
சென்னை: ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு மற்றும் அதிநவீனபடங்களை அனுப்பும் ‘கார்டோசாட்-3’ செயற்கைகோள் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த 13 வணிக ரீதியிலான ‘நானோ’ செயற்கைகோள்களை கடந்த மாதம் 27ம் தேதி இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், புவி கண்காணிப்பு செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோளை பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் 11ம் தேதி விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. எனவே, திட்டமிட்டப்படி ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து நாளை மதியம் 3.25 மணிக்கு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 628 கிலோ எடைகொண்டது.
ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதும் ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 37 டிகிரி கோணத்தில் 576 கி.மீ தொலைவில் அதன் திட்டமிட்ட சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் இன்று தொடங்குகிறது. மேலும், பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட்டானது ஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் 75வது ராக்கெட் ஆகும். இஸ்ரோவின் சொந்த செயற்கைகோளான ரிசாட்-2பிஆர்1 உடன் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான 3 செயற்கைகோள்கள், அமெரிக்காவிற்கு சொந்தமான 6 செயற்கைகோள்கள் என மொத்தம் 9 செயற்கைகோள்கள் வணிக ரீதியாக விண்ணில் செலுத்த உள்ளது.