மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தேர்வுக்கான மறைமுக தேர்தலை எதிர்த்த திருமாவளவன் வழக்கு தள்ளுபடி...சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
12/10/2025 2:50:22 PM
சென்னை: மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி மேயர், நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவர்கள் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த நவம்பர் 19ம் தேதி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மேயர் மற்றும் தலைவர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும், பெரும்பான்மை உறுப்பினர்கள் வேறு கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்றத்தை சுமூகமாக நடத்த முடியாது. எனவே, இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேர்முக தேர்தல் தான் நடத்தப்பட வேண்டும்.
மறைமுக தேர்தல் நடத்த மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவியும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பதவியும் வெவ்வேறானவை. எனவே, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராகி வக்கீல் வாதிடும்போது, அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமே, மறைமுக தேர்தல் மூலம் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்க, இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. சுயேட்சைகள் போட்டியிட முடியாது.
எனவே இது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘தேர்தலில் எங்களை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று யாரும் கோர முடியாது. தேர்தல் நடத்துவது என்பது, சட்ட விதிகளுக்கு உட்பட்டது. ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தலில் எதாவது பிரச்னை, குறைபாடு இருந்தால் மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும். மறைமுக தேர்தல் என்பது அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. இதில் எந்த அரசியல் சாசன மீறலும் இல்லை. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.