யூ டியூப் மூலம் விவரம் தெரிந்துகொண்டு ஏடிஎம் உடைத்து பணம் கொள்ளை...பலே வாலிபர் கைது; ரூ.2 லட்சம் பறிமுதல்
12/5/2025 3:34:18 PM
ஆவடி: செல்போனில் யூ டியூப் பார்த்து அதன்மூலம் ஏடிஎம்மில் பணம் கொள்ளையடித்துவந்த வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 2 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் உள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு வாலிபர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருப்பது பெங்களூரில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலக கண்காணிப்பு கேமரா மூலம் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கிருந்து முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து எஸ்ஐக்கள் ரங்கநாதன், ராமச்சந்திரன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது ஏடிஎம் மையத்தில் வாலிபர் ஒருவர், இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து, அந்த வாலிபர் தப்பிச்செல்லாமல் இருக்க ஏடிஎம் மையத்தின் ஷட்டரை போலீசார் இழுத்து மூடிவிட்டு பட்டாபிராம் சரக பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்தார். இதன்பிறகு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் ஏடிஎம் மைய ஷட்டர் கதவை திறந்து வாலிபரை பிடித்தனர்.
பின்னர் அந்த நபரை முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். இதில் அவர் திருநின்றவூர் அருகே பாக்கம், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த உதயசூரியன் (32), டிப்ளமோ படித்துவிட்டு கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், ‘’முத்தாபுதுப்பேட்டை அருகே காவனூர் பகுதியில் ஒன் இந்தியா ஏடிஎம் மெஷினை உடைத்து ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்ததையும் திருநின்றவூர், சிடிஎச் சாலை, பாடி-முகப்பேர் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’உதயசூரியனுக்கு வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். பங்கு சந்தையில் பணம் கட்டி நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் யூ டியூப் மூலம் ஏடிஎம் மையத்தை எந்தெந்த வகையில் திறக்கலாம் என்பதை அறிந்து கொண்டு இதன்படி ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடித்துள்ளார். ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்ததும் சிசிடிவி கேமராவில் சோப்பு நுரையை ஸ்பிரே செய்துவிடுவார்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து, உதயசூரியனிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.