டெலிவரி செய்துவிட்டதாக கூறி ஆன்லைன் நிறுவன ஊழியர்கள் நூதனமுறையில் மொபைல் மோசடி
12/5/2025 3:33:01 PM
அம்பத்தூர்: வீடுகளுக்கு டெலிவரி செய்துவிட்டதாக கூறி, நூதனமுறையில் செல்போன் திருடிய ஆன்லைன் நிறுவன ஊழியர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர். ஆன்லைன் மூலம் செல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பொதுமக்கள் பலர் ஆர்டர் கொடுத்து வாங்குகின்றனர். இவ்வாறு புக்கிங் செய்யப்படும் பொருட்களை தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டெலிவரி கொடுக்கின்றனர். இதன்படி அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கிவரும் ஆன்லைன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஆர்டர் செய்யும் செல்போன்களை டெலிவரி செய்யாமல், வீடு பூட்டியிருக்கிறது என்று கூறி திரும்ப கம்பெனியில் ஒப்படைக்கின்றனர். பின்னர் அந்த செல்போனை டெலிவரி செய்வதாக கம்பெனியில் கூறி, அவற்றை திருடியுள்ளனர்.
இவ்வாறு அந்த டெலிவரி நிறுவனத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன உதவி மேலாளர் கமலக்கண்ணன், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கம்பெனியில் பணியாற்றும் 3 ஊழியர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.