ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் நாளை தொடக்கம்: 13ம் தேதி கடைசி நாள்
12/5/2025 2:27:42 PM
சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இறுதிநாள் வரும் 13ம் தேதியாகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. வார்டு வரையறை மற்றும் பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு செய்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டரீதிரியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிச. 13ம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்தது.
இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2ம் தேதி அறிவித்தது. அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி, பின்னர் அறிவிக்கப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் 13ம் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 16ம் தேதி நடைபெறும். 18ம் தேதி வரை வேட்பு மனுக்களை திருப்ப பெறலாம்.
தமிழகத்தில் மொத்தமுள்ள 1,18,974 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்பிட நேரடி தேர்தல் நடைபெறுகிறது. இதில், 31 மாவட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.
முதல் கட்டத்தில் 194 ஊராட்சிகள் உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 194 ஊராட்சி ஒன்றியங்கள் எவை என்றும், 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மீதமுள்ள ஊராட்சி ஒன்றியங்கள் எவை என்றும் அறிவிக்கப்படும். வேட்பு மனுதாக்கல் நாளை முதல் தொடங்குவதால், வேட்பாளர்கள், அவர்கள் பகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். கல்வித்தகுதி, சொத்து விவரம், குற்றவியல் வழக்குகளின் விவரங்களை வேட்புமனுவுடன் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும், தங்களுக்கான சின்னம் குறித்த படிவங்களை வேட்புமனு திரும்ப பெறும் நாளன்று 3 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்பிக்காவிட்டில் அவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக கருதப்படுவார்கள்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வைப்பு தொகையாக ரூ.200ம், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.600ம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு ரூ.1000 வைப்புதொகை செலுத்த வேண்டும். இதற்கிடையில் வார்டு மறுவரை முழுமையாக முடித்து பின்பு தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் உத்தரவை பொறுத்தே உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா, இல்லையா என்பது தெரிய வரும். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.