புதிதாக உருவான தென்காசிக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி இல்லாததால் கட்சியினர் ஏமாற்றம்
12/4/2025 3:39:07 PM
தென்காசி: புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி உருவாக்கப்படாததாலும் இங்குள்ள 5 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறாததாலும் வாக்காளர்களும் அரசியல் கட்சியினரும் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப்பிறகு உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் வெளியிடப்பட்டது. அதுவும் ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இல்லாமல் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தென்காசி மாவட்டத்தில் அதிக அளவில் நகராட்சிகளும் பேரூராட்சிகளும் உள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் என 5 நகராட்சிகள் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஐந்து நகராட்சிகளுக்கும் தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதேபோன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படாதால் நகர்ப்புற மக்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேபோன்று ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஆகிய 4 பதவிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு என மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி வழங்கப்படவில்லை.
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட பஞ்சாயத்து பதவி மட்டுமே உள்ளது. இதனால் தென்காசி மாவட்ட மக்களுக்கு தனி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் வாக்காளர்களும் அரசியல் கட்சியினரும் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துகிறோம் என்று நீதிமன்றத்தை திசை திருப்புவதற்காகவே பெயரளவிற்கு ஏராளமான குறைகளுடன் தேர்தலை அறிவித்திருப்பதன் மூலம் இந்த குறைகளையே காரணமாக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர வைத்து தேர்தலை நிறுத்துவதற்காகத்தான் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
அரசு ஊழியர்கள் மன உளைச்சல்
ஊரக உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு நடத்தப் போகிறோம் என்ற கவலையில் ஊராட்சி ஒன்றியத்தினர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் எவ்வாறு தேர்தல் பணிகளை மேற்கொள்வது என செய்வதறியாது திகைத்து வருகின்றனர். குறிப்பாக வாக்குப்பதிவிற்கு ஆசிரியர்களை அதிக அளவில் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால் தற்போது அரையாண்டு தேர்வு காலமாக இருப்பதால் எப்படி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடியும் என்பது தெரியவில்லை. தேர்தல் நாள் மட்டுமன்றி தேர்தல் நடைமுறை குறித்து அவர்களுக்கு மூன்று முறை அதாவது மூன்று நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற காரணங்களை நீதிமன்றத்தில் எடுத்துக்கூறி தேர்தலுக்கு தடை வாங்குவது குறித்து பொதுநல ஆர்வலர்கள் பலரும் ஆலோசித்து வருகின்றனர்.
‘பிரசாரத்திற்கு’ பயன்படுத்த திட்டம்
இதுபோன்று கிராம ஊராட்சி தேர்தல்களை தனியாக இதுவரை தமிழகத்தில் நடத்தியது இல்லை. அதனையும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டமாக நடத்துகின்றனர். இவ்வாறு நடத்துவதற்கான காரணமும் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. அதாவது இரண்டு கட்டமாக நடத்தும்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும் ஊர்களில் உள்ள கட்சி நிர்வாகிகளையும் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ஆளும் கட்சியினர் தங்கள் ‘பிரசாரத்திற்கு’ பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.