அச்சிறுப்பாக்கம் அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாப பலி
12/3/2025 4:38:28 PM
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே வாகனம் மோதி பைக்கில் சென்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (20). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றினார். இன்று காலை பைக்கில் சென்னைக்கு புறப்பட்டார். மதுராந்தகம் ஏரிக்கரை புறவழி சாலையில் வந்துகொண்டிருந்தபோது லேசாக மழை பெய்தது. அப்போது எதிரே வேகமாக வந்த ஒரு வாகனம், திடீரென அவரது பைக் மீது மோதியது.
இதில் பைக்குடன் தூக்கிவீசப்பட்ட லட்சுமணன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்ததும் மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.