இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி: தீவிரவாதத்தால் ரூ70 லட்சம் கோடி இழப்பு... வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் பேச்சு
11/15/2019 2:48:27 PM
பிரெசிலியா: தீவிரவாதத்தால் உலகின் பொருளாதாரத்திற்கு சுமார் 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் 11வது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளின் தொழில் துறை தலைவர்கள் மாநாட்டில் பேசினார். தொடர்ந்து, பிரெசிலியாவின் பழமையான இட்டாமராடி அரண்மனையில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் கூட்டத்திலும் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ‘உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பெரும்பாலான தீவிரவாத செயல்கள் மதவாத இயக்கங்களால்தான் நடைபெறுகின்ன. மதம் அடிப்படையாக இருக்கும் வரை தீவிரவாதத்தை துடைத்தெறிய முடியாது.
உலகிற்கு தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள ஒரு டிரில்லியன் (ரூ70 லட்சம் கோடி) பொருளாதார இழப்பை ஈடு செய்ய வேண்டும். தீவிரவாதத்தால் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் குறைந்துள்ளது’ என்று பேசினார். தொடர்ந்து, பிரேசில் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, பிரேசிலியாவில் இருந்து நேற்றிரவு தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வர்த்தகம், புதுமை, தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றில் உறவுகளை உறுதிப்படுத்துவது குறித்து பலனளிக்கும் உரையாடல்கள் இருந்தன. எதிர்கால பாடங்களில் கவனம் செலுத்துவது நிச்சயமாக ஆழ்ந்த ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும். அது அந்தந்த நாடுகளின் மக்களுக்கு பயனளிக்கும்’ என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.