இளம்பெண்ணை குத்திக் கொன்ற 4 பேருக்கு ஆயுள்தண்டனை
11/12/2025 3:30:09 PM
தூத்துக்குடி: இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட் ஆயுள் சிறை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அடுத்த வில்லிசேரி, நடுக்காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் தங்கபாண்டி (35). இவரது மனைவி கற்பகம் (32). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள். இந்நிலையில் தங்கபாண்டியன் தனக்கு ஆண் குழந்தை வேண்டும் எனக்கூறி கற்பகத்தை கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் தனது மூத்த சகோதரியின் மகளை 2ம் தாரமாக திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டார்.
இதற்காக தங்கபாண்டி அவரது அண்ணன் தங்கமாரிமுத்து (40), தங்கை லதாசெல்வி (32), அக்கா சுப்புலட்சுமி (48) மற்றும் சுப்புலட்சுமியின் மகன் சரவணகுமார் (26) ஆகியோர் சேர்ந்து கற்பகத்தை துன்புறுத்தியதுடன் அவரது பெற்றோர் வீட்டில் இருந்து ரூ 50 ஆயிரம் வாங்கி வருமாறு கூறி வீட்டைவிட்டு துரத்தினர். இந்நிலையில் சிறிது காலம் தனது தாய் வீட்டில் இருந்த கற்பகம் கடந்த 2015ம் ஆண்டு ஆக. 2ம் தேதி மீண்டும் சேர்ந்து வாழ கணவர் தங்கபாண்டி வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், அப்போது அவர் ரூ.50 ஆயிரம் வாங்கி வரவில்லை. மேலும் அவர் திரும்ப வந்துவிட்டதால் 2ம் திருமணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கற்பகத்தின் கணவர் தங்கபாண்டி மற்றும் அவரது அண்ணன் தங்கமாரிமுத்து, தங்கை லதாசெல்வி, அக்கா சுப்புலட்சுமி மற்றும் சுப்புலட்சுமியின் மகன் சரவணகுமார் ஆகியோர் சேர்ந்து கற்பகத்தை சரமாரியாக தாக்கியதோடு கத்தியால் குத்தினர். இதில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்து படுகாயமடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிந்து தங்கபாண்டி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கை தூத்துக்குடி மகிளா கோர்ட் நீதிபதி குமார் சரவணன் விசாரித்து வந்தார். இதனிடையே இவ்வழக்கில் ஜாமீனில் வந்த சுப்புலட்சுமியின் மகன் சரவணகுமார் தற்போது வரை தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால் இவ்வழக்கில் அவரது பகுதி பிரிக்கப்பட்டுள்ளது. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள அவரை கயத்தாறு போலீசார் தேடி வருகின்றனர்.
மீதமுள்ளவர்களில் தங்கபாண்டி, அவரது அண்ணன் தங்கமாரிமுத்து, தங்கை லதாசெல்வி, அக்கா சுப்புலட்சுமி ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி குமார் சரவணன் நேற்று தீர்ப்பளித்தார்.