அம்பத்தூர் அருகே கார் உருண்டு கவிழ்ந்து ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்
11/6/2025 4:01:56 PM
அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் தாம்பரம் புறவழி சாலையில் ஒரு கார் உருண்டு கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். மற்ற இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை திருவேற்காடு அருகே வடநூம்பல் பிரதான சாலையை சேர்ந்தவர் லோகேஷ்ராஜ் (34). தனியார் நிறுவன ஊழியர். இவரது நெருங்கிய நண்பர்கள், பம்மலை சேர்ந்த ராம் (24), குரோம்பேட்டை, ராதா நகரை சேர்ந்த சத்தியபிரகாஷ் (32). இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள்.
இந்நிலையில், வடநூம்பல் பகுதியில் இருந்து நேற்றிரவு லோகேஷ்ராஜ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக தாம்பரத்துக்கு காரில் சென்றுள்ளார். பின்னர் அங்கு தனது 2 நண்பர்களுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, இன்று அதிகாலை 3 மணியளவில் தாம்பரம் புறவழி சாலை வழியே லோகேஷ்ராஜ் மற்றும் 2 நண்பர்களும் புழல் பகுதிக்கு நோக்கி காரில் வந்துள்ளனர். இவர்கள் அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் சுங்கசாவடி பகுதி அருகே காரில் வந்தனர். அப்போது லோகேஷ்ராஜ் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து உருண்டு சென்றுள்ளது. பின்னர் அந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரிமீது வேகமாக மோதியது.
இதில் காருக்குள் சிக்கி லோகேஷ்ராஜ், ராம், சத்தியபிரகாஷ் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். அங்கு படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே லோகேஷ்ராஜ் இறந்து போனதாக தெரிவித்தனர். மேலும், படுகாயம் அடைந்த ராம், சத்தியபிரகாஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்புகாரின்பேரில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.