திருச்சி ஏர்போர்ட்டில் விடிய விடிய அதிரடி சோதனை: ரூ.11 கோடி தங்கம் பறிமுதல்...நுழைவாயிலில் இருந்த வியாபாரிகள் சிக்கினர்
11/6/2025 2:41:04 PM
திருச்சி: துபாய், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானங்களில் அதிகாரிகள் விடிய விடிய நடத்திய சோதனையில் ரூ.11 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலைய நுழைவாயிலில் இருந்த தங்க வியாபாரிகளும் சிக்கினர். இதுதொடர்பாக 15 பயணிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு வெளிமாவட்டங்கள், வெளிநாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே தினமும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடும் பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தில் உள்ள சில கருப்பு ஆடுகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில், ஒரு சிலர் பேசிய கரன்சிகளை கொடுக்க முடியாமல் போனால் அவர்களை அதிகாரிகள் பொறி வைத்து பிடிப்பதாகவும், தொடர்ந்து அவர்களை கவனித்ததால் கடத்தல் பிசினஸ் ஜரூராக நடப்பதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில், கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சி வந்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது மதுரையை சேர்ந்த அப்துல்ரகுமான் என்பவர் தனது உடைமையில் மறைத்து வைத்து எடுத்து வந்த ₹1,08,000 மதிப்புள்ள 216 சிகரெட் பாக்கெட்டுகளும், ரூ.9,54,858 மதிப்புள்ள 250 கிராம் எடையுள்ள 19 ஜோடி தங்க காதணிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10,62,858 ஆகும்.
இதேபோல் துபாயில் இருந்து நேற்று காலை திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது கேரளாவை சேர்ந்த மம்மி அகமது குட்டி என்பவர் சூட்கேஸ் பீடிங்கில் வயர் போல் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.19,59,356 மதிப்புள்ள 508 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில், வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து திருச்சி விமான நிலையத்தில் நேற்றிரவு மலேசியாவிலிருந்து வந்த 3 விமானங்கள், ஷார்ஜாவிலிருந்து வந்த ஒரு விமானம் உள்பட 4 விமானங்களில் வந்திறங்கிய 150 பயணிகளிடம் சென்னை, மதுரை, கோவையிலிருந்து வந்துள்ள 22 பேர் கொண்ட மத்திய வருவாய் புலனாய்வு (டிஆர்ஐ) அதிகாரிகள் குழுவினர் விமான நிலைய உட்பகுதியில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடர்ந்து வருகிறது. இந்த சோதனையில் அனைவரிடமிருந்தும் சிறிய சிறிய அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.11 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
தங்கம் கொண்டு வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், ‘‘விமான நிலையத்தின் வெளியே வியாபாரிகள் நிற்பார்கள். அவர்களிடம் முறையாக எடுத்து சென்று கொடுத்தால் கூடுதலாக பணம் தருவார்கள். அதற்கு ஆசைப்பட்டு தான் நாங்கள் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர். உடனே, விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், விமான நிலைய வாயிலில் சோதனை நடத்தி அங்கிருந்த தங்க வியாபாரிகள் சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சோதனையில் எல்இடி டிவி போன்ற எலக்ட்ரிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு 4 விமானங்களில் வந்தவர்களை அழைத்து செல்ல அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஏர்போர்ட் நுழைவு வாயிலில் நேற்று மாலை முதலே காத்திருந்தனர். இன்று வரை பயணிகள் விடுவிக்கப்படாததால் அவர்களை அழைக்க வந்த உறவினர்கள் காத்துகிடந்தனர்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை மலேசியாவிலிருந்து வந்த பயணிகள் மட்டும் விசாரணை முடிந்து வெளியே விடுவிக்கப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்துவது அதிகரித்து வருவதால், அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். நேற்றிரவு விடிய விடிய நடத்திய சோதனையில் 15 பேர் உடலில் தங்கம் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படுவதால் அவர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சுங்க அலுவலகத்துக்கு கொண்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஒரே மாதத்தில் 100 கிலோ தங்கம் பறிமுதல்: கடத்தல் நகரமாகும் திருச்சி
திருச்சி விமான நிலையத்தில் தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் கடத்துவதை தடுக்க பல்வேறு கெடுபிடிகள், சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மீறியும் தங்கம், கரன்சி கடத்துவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை சுமார் 100 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை ரூ.70 கோடிக்கு மேல் தங்கம், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் திருச்சி தங்கம் கடத்தும் நகரமாக மாறிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2015ல் சிபிஐ சோதனை: கடந்த 2015ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து குருவிகள்(ஏஜெண்டுகள்) மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதாக சிபிஐக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருச்சி வந்த சிபிஐ அதிகாரிகள் குழு விமான நிலையத்தில் 2 நாள் முகாமிட்டு விமானங்களில் வந்திறங்கிய பயணிகளை சோதனையிட்டனர்.
இதில் பயணிகள் கொண்டு வந்த 100க்கும் மேற்பட்ட எல்சிடி டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் விமான அதிகாரியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக 10 குருவிகள் உள்பட ஏர்போர்ட் கஸ்டம்ஸ் உதவி கமிஷனர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். தற்போது, தங்க கடத்தல் தொடர்பாக சென்னை, கோவையில் இருந்து வந்த மத்திய குழுவினர் 22 பேர் கொண்ட குழுவினர் விடிய விடிய சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.