திருத்துறைப்பூண்டி அருகே காங்.பிரமுகர் மனைவி: கழுத்தறுத்து கொலை...சலவை தொழிலாளி கைது
11/5/2025 3:43:15 PM
திருத்துறைப்பூண்டி: காங்கிரஸ் பிரமுகர் மனைவியை கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதாவனத்தை சேர்ந்தவர் ராமசந்திரன்(70). இவர் காங்கிரஸ் பிரமுகர். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். நேற்று மாலை ராமச்சந்திரன் சொந்த வேலையாக திருத்துறைப்பூண்டி வந்துவிட்டார். 6.45 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆண் பயன்படுத்தும் ஒரு ஜோடி செருப்பு வீட்டு வாசலில் கிடந்தது.
விசாரணையில், அந்த செருப்பு திருத்துறைப்பூண்டி வாளமாபுரத்தை சேர்ந்த சலவை தொழிலாளியான முருகானந்தம் (36) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. ராமசந்திரன் உடுத்தும் ஆடைகளை முருகானந்தம் தான் சலவை செய்து கொடுப்பார். இதனால் ராமசந்திரன் வீட்டுக்கு முருகானந்தம் அடிக்கடி வருவார். நேற்று அவர் வந்தபோது ராஜேஸ்வரி பீரோவை திறந்து அதில் பணத்தை வைத்துள்ளார். இதைப்பார்த்த முருகானந்தம் பணத்துக்கு ஆசைப்பட்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பீரோவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று இரவு திருத்துறைப்பூண்டியில் முருகானந்தத்தை போலீசார் கைது செய்தனர். எவ்வளவு பணத்தை திருடிச்சென்றார் என்பது பற்றி அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
படம் பார்த்த கொலையாளி: ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு, பணத்தை திருடிச்சென்ற முருகானந்தம் தனது வீட்டுக்கு செல்லாமல் திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்று கைதி படம் பார்த்துள்ளார். படம் முடிந்து பைக்கில் வீடு திரும்பிய போது தான், போலீசார் அவரை வழிமறித்து கைது செய்தனர்.