டெல்லியில் மாசு அதிகரித்ததால் இன்று முதல் ஒற்றை, இரட்டை இலக்க எண் திட்டம் அமல்: மீறுவோருக்கு ரூ.4,000 அபராதம்; சில வாகனத்துக்கு விலக்கு
11/4/2025 3:46:47 PM
புதுடெல்லி; டெல்லியில் கடந்த சில தினங்களாக மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வரும்நிலையில், சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) நேற்று காலை 6 மணிக்கு 708 ஆக பதிவாகியிருந்தாலும், மாசு அளவு 900 ஆக உயர்ந்தது.
டெல்லியில் காற்றின் தரத்தை கட்டுப்படுத்தும் கடைசி முயற்சியில், டெல்லி மாநில அரசு ஒற்றை - இரட்டை வாகன எண் திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. இத்திட்டம், நவ. 15ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஒற்றை - இரட்டை வாகன எண் திட்டம், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், ஒற்றைப்படை இலக்கத்துடன் (1, 3, 5, 7, 9) முடிவடையும் பதிவு எண்களைக் கொண்ட தனியார் வாகனங்கள், ஒற்றைப்படை தேதிகளில் சாலைகளில் அனுமதிக்கப்படும். இரட்டை இலக்கத்துடன் (0, 2, 4, 6, 8) இருக்கும் வாகனங்கள் இரட்டை இலக்க தேதிகளில் அனுமதிக்கப்படும். பிற மாநிலங்களின் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை வாகன எண் திட்டம், போக்குவரத்து வாகனம் அல்லாத 4 சக்கர வாகனங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும்.
இரு சக்கர வாகனங்கள் மற்றும் அவசர வாகனங்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஏற்கனவே அறிமுகப்படுத்தியது போல், பெண்கள் தனியாக வாகனம் ஓட்டும் கார்கள், அனைத்து பெண்கள் மற்றும் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் வரும் பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள். பள்ளி சீருடையில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கொண்ட வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்படும். நாட்டின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முதல்வர்கள், லெப்டினன்ட் கவர்னர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு வாகனங்கள் இத்திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
இருப்பினும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மாநில அமைச்சரவை உறுப்பினர்கள் இந்த திட்டத்திலிருந்து விலக்கப்பட மாட்டார்கள். இந்த முறை தனியாருக்குச் சொந்தமான சிஎன்ஜி வாகனங்கள் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படாது. இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஒற்றைப்படை இரட்டைப்படை திட்டத்தின் விதிகளை மீறுபவருக்கு ரூ.4,000 அபராதம் விதிக்கப்படும். ஒற்றைப்படை திட்டத்தின் போது டெல்லி மெட்ரோ ரயிலில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், பொது போக்குவரத்து முறையை முறைப்படுத்த 2,000 தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.